துருக்கிக் கடற்கரையில் இரண்டு கப்பல்கள் மோதின: கப்பல் மூழ்கியது! 10 பேரைக் காணவில்லை!
இன்று புதன்கிழமை அதிகாலையில் இஸ்தான்புல் அருகே மர்மாரா கடலில் மற்றொரு கப்பலுடன் மோதியதில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்த 10 பேரை துருக்கி அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
துக்பெர்க் இமாமோக்லு கப்பல் மூழ்கிவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம், அதை ஏறக்குறைய உறுதிப்படுத்தவும் செய்துள்ளோம், என்று போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதர் உரலோக்லு இஸ்தான்புல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கப்பலில் இருந்த 10 பணியாளர்களும் துருக்கி நாட்டவர்கள் என்றும், அவர்களை கைபேசி மூலம் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் உரலோக்லு கூறினார்.
இந்தக் கப்பல் 11 நிமிடங்களில் மிக வேகமாக மூழ்கியது என்று கூறலாம். உயிருடன் யாரும் மீட்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் (0000 GMT), நகரின் மேற்கு சிலிவ்ரி மாவட்டத்திற்கு அப்பால், துக்பெர்க் இமாமோக்லு என்ற சரக்குக் கப்பலும் அல்சு என்ற இரசாயனக் கப்பலும் மோதிக்கொண்டதாக இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு ஹெலிகாப்டர்களும் 12 தேடுதல் மற்றும் மீட்புக் கப்பல்களும் அப்பகுதியை சல்லடை போட்டுத் தேடி வருகின்றன.
துக்பெர்க் இமாமோக்லு கப்பலுக்குச் சொந்தமான உயிர் காக்கும் படகு உள்ளிட்ட உயிர் காக்கும் உபகரணங்கள் கடலின் மேற்பரப்பில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சகத்தின் கடல்சார் இயக்குநரகம் தெரிவித்துள்ளது .

Post a Comment