தள்ளாடும் தேசிய மக்கள் சக்தி!
பெரும் பிரச்சாரங்களுடன் தனது வடமாகாணசபை தேர்தல் கனவில் மிதந்து கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி எதிர்பாராத பின்னடைவுகளை எதிரகொள்ள தொடங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், நெல்லியடியில் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் ஒருவர் தலைமையின் பணிப்பினையடுத்து பதவி விலகியுள்ளார்.
வடமராட்சி தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினரான சந்திரகுமார் கணேசரூபன், தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார்.
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்படடிருந்தார்.எனினும் பின்னராக அரசியல் அழுத்தங்காரணமாக காவற்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
வீட்டின் மீது, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தலைமையிலான கும்பல் ஒன்று கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதுடன், வீட்டு வளாகத்திலிருந்த கண்காணிப்புக் கமராக்களையும் அடித்து உடைத்துச் சேதப்படுத்தியது.
தாக்குதல் குறித்து நெல்லியடி காவல் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் உறுப்பினரையும் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்திருந்தனர். எனினும், காவல் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர்கள் காவற்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டமை பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் மட்டங்களில் எழுந்த கடும் அதிருப்தி மற்றும் சர்ச்சைகளைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

Post a Comment