கன்னியா வெந்நீருற்றிற்கும் காலக்கெடு!
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்லியல் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, தற்போதுள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் திங்கட்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி, தொல்லியல் திணைக்களம் குறித்த கன்னியா பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்தில் என்ன வகையான நிர்மாணத்தை மேற்கொள்கின்றது என்பது குறித்த எழுத்து மூல அறிக்கையைத் தமது தரப்பில் சமர்ப்பிக்க அவகாசம் வழங்குமாறு அரச தரப்புச் சட்டத்தரணி சஞ்ஜீவன் மன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, இவ்வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்காளி தரப்பில் மன்றில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் “தொல்பொருள் என அடையாளம் காணப்பட்ட விடயத்தைப் பாதுகாப்பதற்குத் தொல்லியல் திணைக்களத்திற்கு உரித்து உண்டு. அதன்படி, இங்கு இருப்பதாகச் சொல்லப்படும் பண்டைய தூபியை அது தற்போது உள்ள நிலையிலேயே பாதுகாப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு உரித்து உண்டு
அந்த இணக்கப்பாட்டின் படியே அங்கே இருந்த பிள்ளையார் கோயில் இன்னுமொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அரசாங்கத்தின் இணக்கத்தோடு அதற்கான இட ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அந்த இடத்தில் தூபியை மீள் நிர்மாணம் செய்வதற்குத் தொல்லியல் திணைக்களம் நடவடிக்கைகள் எடுத்ததை அறிந்து, நீதிமன்றத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டிற்கு மாறாகத் தொல்லியல் திணைக்களம் நடந்து கொள்கின்றது என்று, குறித்த காணியின் உரிமையாளர் சார்பில் சட்டத்தரணி திருமதி. பிரசாந்தி உதயகுமார் நகர்த்தல் பத்திரம் ஒன்றை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
தொல்லியல் சட்டத்தின் 20ஆவது பிரிவில், காணி உரிமையாளருக்கும் தொல்லியல் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையிலே குறித்த காணியில் அடையாளம் காணப்படும் தொல்லியல் விடயம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அந்தத் தொல்லியல் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தமாக அது அமையும்.
தொல்லியல் சட்டத்தின் 20ஆம் பிரிவின் கீழ் சொல்லப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்திலே, மிகவும் விசேடமாக ‘பாதுகாப்பு மட்டும்’ என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, அங்கு வேறு ஏதும் செய்யவோ, குறிப்பாகப் புனரமைப்பு செய்யவோ முடியாது; உள்ளவற்றைப் பாதுகாக்க மட்டுமே முடியும்.
வேறு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வேறு அதிகாரங்களை இங்கு அவர்கள் பாவிக்க முடியாது; ஏனெனில், பாதுகாப்பது தவிர அந்த இடத்தில் வேறு எந்தச் செயலையையும் செய்ய மாட்டோம் என்று நீதிமன்றத்தில் அவர்கள் எங்களோடு இணங்கியிருக்கிறார்கள். இதனடிப்படையிலேயே நாம் இந்த விடயத்தைக் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்” என சுமந்திரன்; தெரிவித்தார்.

Post a Comment