யாழ். சிறையில் உயிர்மாய்த்த புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் சடலத்தை வாங்க மறுத்துள்ள மனைவி


யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். 

அதனை அடுத்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சடலத்தை ஜெயக்குமாரின் மனைவி , தனது கணவர் ஜெயக்குமார் என்பதனை அடையாளம் காட்டியதை அடுத்து , சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை நடைபெற்றது, 

உடற்கூற்று பரிசோதனையில் , உயிரை மாய்த்துக்கொண்டமை உறுதி செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து சடலத்தை மனைவியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளை , தமது குடும்ப பொருளாதார நிலைமை காரணமாக இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது என தெரிவித்த மனைவி , இறுதி சடங்கினை அரச செலவில் செய்யுமாறு கோரி சடலத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளார்

அதனை அடுத்து அரச செலவில் இறுதி சடங்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் , சடலம் யாழ்.போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை , மாணவி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களின் தீர்ப்பினை மீளவும் உறுதி செய்வதற்காக குறித்த வழக்கு யாழ் . மேல் நீதிமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை அழைக்கப்பட்ட இருந்த நிலையில் , குற்றவாளிகளில் ஒருவர் உயிர் மாய்த்துள்ளமையால் , இன்றைய தினம் வழக்கு அழைக்கப்படவில்லை. பிறிதொரு தினத்திற்கு வழக்கினை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மாணவி கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில் , அண்மையில் உச்ச நீதிமன்றம் இருவரை விடுதலை செய்து ஐந்து நபர்களின் தீர்ப்பினை உறுதி செய்திருந்தது. அதில் விசாரணைகள் நடைபெற்ற கால பகுதியில் ஒருவர் சிறையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில் , மற்றுமொருவர் இன்றைய தினம் உயிர்மாய்த்த நிலையில் ,மூவரே தற்போது மரண தண்டனை கைதிகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments