வலி. வடக்கில் இராணுவத்தின் சொகுசு பங்களாவினால் கடற்தொழிலுக்கு தடை


மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

வலி. வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் பகுதிக்குள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மயிலிட்டியில் உள்ள இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிடத்திற்கு (கொமோண்டோ பங்களா) முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்த வேளை திடீரென மழை பெய்தமையால் , மழைக்கு ஒதுங்கி நிற்க பங்களாவின் எல்லை வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பாள் கட்டியுள்ளனர் .

அதனை அடுத்து கொட்டும் மழைக்குள்ளும் அவ்விடத்திற்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தரப்பாளை உடனே கழட்டுமாறும் , இல்லை எனில் இதில் உள்ளவர்களை கைது செய்வேன் என மிரட்டியுள்ளார். 

அதனை அடுத்து அங்குள்ளவர்கள் அதனை காணொளி எடுக்க முற்பட்ட வேளை அவர்களுடன் தர்க்கம் புரிந்து விட்டு , அவ்விடத்தில் இருந்து திரும்பி சென்றார் என தெரிவிக்கப்படுகிறது. 

அது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், 

கீரிமலை - பருத்தித்துறை வீதியில் கடற்கரை பக்கமாக உள்ள காணிகள் உயர் பாதுகாப்பு வலயமாகவோ , இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியாகவோ காணப்படவில்லை. ஆனாலும் அந்த காணிகளை மக்களிடம் இராணுவத்தினர் கையளிக்கவில்லை.

குறித்த பகுதியிலையே இராணுவ தளபதிகளுக்கான சொகுசு தங்குமிடமும் , பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு என சுமார் ஒரு கிலோ மீற்றர் நீள கடற்கரை பகுதியை தம் வசம் வைத்துள்ளனர். 

அத்துடன் பலாலி பகுதியில் , சந்தை கட்டட தொகுதி பொது மக்கள் பாவனைக்காக விடப்பட்டு இருந்தாலும் , அப்பகுதியில் இராணுவத்தினரின் வீதியோர உணவகங்களே காணப்படுகிறது,. அப்பகுதியில் தனியார் வியாபாரம் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது.

அதேபோன்றே குறித்த கடற்கரை பகுதியில் இருந்து முன்னர் மீன் பிடி நடவடிக்கைக்கு சென்றவர்கள், தற்போது அப்பகுதியில் மீன் பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.

குறித்த பகுதியில் உள்ள காணிகளை இன்னமும் மக்களிடம் மீள கையளிக்காது, இராணுவத்தினர் தமது பயன்பாட்டிற்காக வைத்துள்ளார்கள் 

பாதுகாப்பு காரணங்கள் இன்றி ,தமது உல்லாச வாழ்வுக்காக தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து வாழும் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி எமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும். எமது வாழ்வாதாரங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அதேவேளை , கீரிமலை - பருத்தித்துறை வீதியில் கடற்கரை பக்கமான காணிகளை ஓரிரு மாதங்களில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக , கடந்த 03ஆம் திகதி யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments