வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு யாழில் எழுச்சி மாநாடு
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழர் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்தது.
ஐம்பது ஆண்டுகள் கடந்தபின்னரும், அதன் அடிப்படை கோரிக்கைகளும் கொள்கைகளுமே தமிழின விடுதலை பாதையின் அடிநாதமாகவும், அடித்தளமாகவும் உள்ளது.
இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம், தீர்மானத்தின் அரசியல், சட்ட மற்றும் தமிழ் இனத்தின் இறைமையின் பரிமாணங்களும் ஆராயப்படும்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழ்மக்களின் அபிலாசையை வெளிப்படுத்த பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடக பிரதிநிதிகள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரை அன்புரிமையுடன் அழைக்கின்றோம் என தெரிவித்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் தவத்திரு வேலன் சுவாமிகள்,அருட்தந்தை அகஸ்ரின் அடிகளார்,அருட்பணி ஜெகதாஸ் அடிகளார் மற்றும் க.இதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment