இந்திய கடற்படையினர் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லையாம்


கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் அல்லது கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இக்குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் இந்தியா எப்போதும் மனிதாபிமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன் சார்ந்து இலங்கை அரசாங்கத்துடன் தாம் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு மதிப்பளித்து மனிதாபிமான ரீதியிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்தியத் தரப்பு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

வென்னப்புவ, வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் சென்ற 12 இலங்கையர்கள், இலங்கைக் கடல் எல்லைக்குள் இருந்தபோது, ஜனவரி 29 அன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் தாக்கப்பட்டதாக மீனவர் குழுவொன்று குற்றம் சுமத்தியிருந்தது. 

சர்வதேசக் கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாக மீனவர்கள் தெரிவித்தனர். 

அத்துடன், இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டைரோன் மெண்டிஸ் தெரிவித்தார். 

No comments