கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் - இந்திய மீனவர்களின் கைதுகளை தீவிரப்படுத்த வேண்டும்


கடந்த காலத்தை விட கடற்படையினர் அதிக வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். அவர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக கடுமையாக முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் செயலாளர்முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கடந்த கால அரசாங்கத்தை. விட தற்போதைய அரசாங்கம் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றது. அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

வட மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் எங்களுக்கு ஒரு பங்கு உண்டு. எனவே கடற்தொழிலாளர்களின் நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும். 

பல்வேறு பகுதிகளில் இழுவை மீன்பிடி படகு தொழில் நடைபெறுகிறது. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த காலத்தை விட இந்த அரசாங்கம் ஒரே நாளில் அதிக அளவு இந்திய மீனவர்களை கைது செய்தது. கடந்த மாதம் ஐந்து படகுகளில் 40 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் உண்மையில் வரவேற்கத்தக்க விடயம். 

கடல் எங்களுக்கு உரியது கச்சதீவும் எங்களுக்கு உரியது. இந்த இறையாண்மைக்கு உட்பட்ட நாட்டில் நாங்களும் ஒரு பங்காளி என்ற வகையில், நாங்கள் இந்த கோரிக்கையை விடுகின்றோம்.

 இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் கடல் சார் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடற்படையினரும் திறமையாக செயல்படுகின்றனர் அவர்கள் கடந்த கால அரசாங்கத்தை விட தற்பொழுது உள்ள அரசாங்கத்தில் மிகவும் வினை திறனுடன் செயல்படுகின்றனர் என மேலும் தெரிவித்தார். 

No comments