ஊழல் விசாரணை : நான்கு நீதிமன்றங்கள்!
ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நான்கு மேல்நீதிமன்றங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது.
அவ்வகையில் புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்காக இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டப்பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல் நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது
அதற்கமைய, 04 மேல்நீதிமன்றங்களைத் தாபிப்பதற்காக தற்போது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ்வரும் கட்டிடங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைப்பதற்காக தமது அமைச்சின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்றத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள வீடுகளில் மகிந்த மற்றும், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பயன்படுத்திய வீடுகள் உள்ளடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment