திருட்டு ஒப்பந்தம் ஏதுமில்லையாம்!



பொதுமக்களது எதிர்ப்பினை தாண்டி மன்னாரில் காற்றாலைகளை அமைக்கும் விவகாரத்தில் இலங்கை அரசு விடாப்பிடியாக இருப்பதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னாரில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 14 காற்றாலைகளையும் அமைப்பதே அரசாங்கத்தின் இறுதி முடிவாக உள்ளதாகவும்  மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் இலங்கை ஜனாதிபதியுடன் திருட்டுத்தனமாக ஒப்பந்தங்களை முன்னெடுத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுதலித்துள்ளார்.

தான் எந்தவித ஒப்பந்தங்களையும் ஜனாதிபதியுடன் செய்யவில்லை என்றும் அவர் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நேற்று (09) மாலை சர்வமதக் குழு, பொது அமைப்புக்கள், போராட்டக் குழு ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மன்னார் ஆயர் ஊடகங்களுக்குக் கருத்துத்  தெரிவித்திருந்தார். 

ஜனாதிபதியைச் சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என்று கூறுகின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினேன். எனினும், அரசாங்கத்தின் நிலைப்பாடு 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் திட்டமிட்டபடி அமைக்க வேண்டும் என்பதே. அதில் அவர்கள் மிகவும் திடமாக இருக்கின்றார்கள் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வடக்கில் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் அரசாங்கத்தினால் சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து சர்ச்சைக்குரிய வகையில் கொள்கலன்கள் அகற்றப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து  பிமல் ரத்நாயக்க துறைமுகங்கள் அமைச்சர் பதவியிருந்து இன்று வெளியேற்றப்பட்டுள்ளார்.அவர் புதிய அமைச்சுகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தெரிவிக்கும் வகையில் செயற்பட்டால் மத மோதல்களே ஏற்படும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் நீதியமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடுவதை போன்று விடயத்துக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தால் அது மத மோதல்களையே ஏற்படுத்தும்.

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்குரிய சிறந்த தீர்வு ஓரிரு வாரங்களில் முன்வைக்கப்படும். எமக்கு எதிராக பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வு பெற்றுக்கொடுத்து வருகிறோம் எனவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


No comments