குற்றவாளிக்கு பாதுகாப்பு ?



கடந்த 22ம் திகதி கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர என்பவர்  பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, ஆகவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளியொருவருக்கு பாதுகாப்பு வழங்கும் இயலுமை பொலிஸ் திணைக்களத்துக்கு கிடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலபதி ' கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர்  லசந்த விக்கிரமசேகர   பொலிஸ்மா அதிபரிடம் பாதுகாப்பு கோரியுள்ளார்.இருப்பினும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை' என்று குறிப்பிட்டார். இதனை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொலை செய்யப்பட்ட வெலிகம  பிரதேச சபையின்  தலைவர் லசந்த விக்கிரமசேகர பொலிஸ் ஆவணப்படுத்தலுக்கமைய பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, சட்டத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்டோருக்கும், சாட்சியாளர்களுக்கும் பிரத்தியேக பாதுகாப்பு வழங்கப்படும்.

பொலிஸ் ஆவணப்படுத்தலில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ள ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கும் இயலுமை பொலிஸ் திணைக்களத்துக்கு கிடையாது.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1947 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக வலையமைப்புகளின் முக்கிய பகுதியாக ஆயுதங்கள் இருப்பதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பாதாள உலகக் கும்பல்கள் இன்னும் ஆயுதங்களை வைத்திருப்பதால், நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

முன்னர் ஒரு இராணுவ முகாமில் இருந்து 78, T-56 துப்பாக்கிகள் பாதாள உலகக் கும்பல்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 36 துப்பாக்கிகள் ஏற்கனவே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்

No comments