கடல் கண்காணிப்புக்களை மேற்கொள்ள ரேடார் தேவை


யுத்தம் முடிந்து விட்டது என்பதற்காக கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவோ , வேண்டாம் எனவோ  சொல்ல முடியாது என வடக்கு கடற்படை கட்டளை  தளபதி  ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது, வலி வடக்கில் ரேடார் தளம் அமைப்பதற்காக தனியார் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கேட்ட போதே  அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கடல் கண்காணிப்பு மிக முக்கியமானது. அதற்கு மனித வலுக்களை மட்டும் பாவிக்க முடியாது. வளர்ந்து வரும் தொழிநுட்பத்திற்கு ஏற்றவாறு , நாமும் எம்மை மாற்ற வேண்டும். 

யுத்தம் முடிந்து விட்டது. அதனால் கடல் பாதுகாப்பு தேவையில்லை என கூற முடியாது. 

கடத்தல்களை கட்டுப்படுத்த மாத்திரமின்றி உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்புக்கும் ரேடார்கள் மிக முக்கியமானது. 

ரேடார்களின் மூலமே நாம் கடல் கண்காணிப்புக்களை மேற்கொண்டு பாதுகாப்பு அளிக்க முடியும். என தெரிவித்தார். 

No comments