தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு!
தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய 2,000 வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்
வழக்குத் தொடரப்பட்டவர்களில், 2024 ஆம் ஆண்டும் செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 13 பேரும், நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 1,700 இற்கும் மேற்பட்டோரும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ஒரு தொகுதியினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத பெருமளவிலான வேட்பாளர்கள் மீதான வழக்கு தொடரும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் பொலிஸார் தகவல் அளித்துள்ளதாகத் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் இலக்கம் 3 தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தமது செலவு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டத்தின்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் நிறைவடைந்த 21 நாட்களுக்குள் தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு, ஒரு வாக்காளருக்காக ஒவ்வொரு வேட்பாளரும் செலவிடக்கூடிய அதிகபட்ச செலவு வரம்பை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment