யாழில். காணி மோசடிகள் - முன் பிணை கோரவுள்ள சட்டத்தரணிகள்
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உறுதி மோசடிகள் தொடர்பில், சட்டத்தரணிகள் சிலரைக் கைது செய்வதற்குக் கடந்த சில நாள்களாகப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
அந்நிலையில் மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் உள்ள சில சட்டத்தரணிகள் தற்போது தலைமறைவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான சில சட்டத்தரணிகள் நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றங்களில் , தமது கைதுகளை தடுக்கும் முகமாக முன் பிணை கோரவுள்ளதாக அறிய முடிகிறது.
காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , நேற்றைய தினமே அவர் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.
இதேவேளை காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்த வேளை குறித்த சட்டத்தரணி அவரது வீட்டில் இல்லாத நிலையில் , அவரது வீட்டுக்குள் பொலிஸார் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தியதாகவும் , தேடுதலுக்கான நீதிமன்ற அனுமதியின்றி , பொலிஸார் அடாத்தாக நடந்து கொண்டு தேடுதல் நடாத்தினார்கள் என குற்றம் சாட்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தோன்றாது சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் , நீதிமன்றங்களின் முன் கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
Post a Comment