திலீபனின் நினைவு ஊர்தி: திருக்கோவிலில் இருந்து ஆரம்பம்.

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு

ஊர்திப் பயணமானது இன்றைய தினம் (15) திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமானது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஊர்திப் பயண ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் நினைவிடத்தில் சந்திரநேருவின் கல்லறைக்கு மலர்மாலை அணிவித்து நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் திலீபனின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய வாகனம் தன் பயணத்தை ஆரம்பித்தது.

இந்த நினைவேந்தல் ஊர்தியான திருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை மற்றும் பாண்டிருப்பு ஆகிய அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசமெங்கும் பயணத்தினை முன்னெடுத்து குறித்த பிரதேசங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, இந்த ஊர்தியானது மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி நகரவுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு இறுதியாக திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments