இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு இந்திய நீதிமன்றம் கொடுத்த தண்டனை
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்ட , பொலிஸ் உத்தியோகஸ்தர் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தப்பி சென்று இந்தியாவில் கைதான நிலையில் அவர் நேற்றைய தினம் நீதிமன்ற உத்தரவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி தலைமன்னார் ஊடாக இந்தியாவிற்கு படகில் சென்ற நிலையில் இராமேஸ்வரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கபட்ட விசாரணையில் தனது சகோதரர் போதைப்பொருளுடன் கைதானதாகவும் , விசாரணையில் சகோதரன் தனது பெயரை கூறியதால் , தன்னை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட போது , தான் தப்பி இந்தியாவிற்குள் வந்ததாக கூறியுள்ளார்.
அதனை அடுத்து இராமநாதபுரம் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்ட நிலையில் , வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக 2 வருட சிறைத்தண்டனை விதித்த மன்று 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
2 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு முகாமில் குறித்த நபர் இருந்தமையை கவனத்தில் எடுத்த மன்று , அவர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கால பகுதியை சிறைத்தண்டனைக்குரிய கால பகுதியாக எடுத்து அவரை விடுதலை செய்தது.
குறித்த நபர் குடிவரவு குடியகழ்வு நடைமுறைகளை சட்ட ரீதியாக மேற்கொண்டு தனது நாட்டுக்கு திரும்பலாம் எனவும் நீதவான் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment