யாழில். கடல் தொழிலுக்கு சென்ற சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கடலுக்குள் இறங்கி கடற்தொழிலில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த சீவரத்தினம் சந்தோஷ் (வயது 17) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்
தனது சிறிய தந்தையுடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை கடற்தொழிலுக்கு சென்ற சிறுவன் , மண்டைதீவு கடற்பகுதியில் களங்கண்டி (கடலுக்குள் இறங்கி தடிகளை நாட்டி அவற்றில் வலைகளை கட்டுவது) தடிகளை நாட்டுவதற்கு கடலுக்குள் இறங்கிய நிலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் , சிறிய தந்தையார் கடலினுள் இறங்கி தேடிய வேளை சிறுவன் கடலில் மூழ்கி மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளான்
அதனை அடுத்து , சிறுவனை மீட்டு படகில் ஏற்றி , குருநகர் மீன்பிடி இறங்கு துறைக்கு சென்று , அங்கிருந்து யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சிறுவனை கொண்டு சென்ற நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment