தொடர்ந்து போராட அழைப்பு!
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி முன்றலில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள அடையாள உண்ணாவிரத போராட்டமானது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிதா தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத் தொடரில் வடக்கு, கிழக்கு தமிழ் உறவுகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் மற்றும் இனப்படுகொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்,உள்நாட்டு விசாரணை பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment