செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டத்தை நடத்துபவர்கள் யார் ? அவர்களின் பின்னணி என்ன
செம்மணி படுகொலை இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் , இராணுவத்துடன் இணைந்து , இராணுவ துணை குழுவாக செயற்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் ஒன்று கூடி செம்மணி படுகொலை நீதி கோரி நிற்கின்றனர். இது எவ்வளவு தூரம் வெளிப்படையாக இருக்கும் என்பதே சந்தேகம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் 29ஆம் திகதி வடக்கு கிழக்கில் போராட்டம் ஒன்றினை தாம் இணைந்து முன்னெடுக்க போவதாக , தம்மை தமிழ் தேசிய பரப்பில் இயங்குபவர்களாக காட்டிக்கொள்ளும் சில கட்சிகள் ஒன்றிணைந்து நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார்.
போராட்டம் மிக முக்கியமானது , காலத்திற்கு தேவையானது. செம்மணி படுகொலை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு , தண்டிக்கப்பட வேண்டும். அதில் எவருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்க போவதில்லை.
ஆனால் இந்த போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக யாழ்ப்பாணத்தில் நேற்று கூடியவர்கள் செம்மணி படுகொலை நடைபெற்ற கால பகுதியில் எவ்வாறு செயற்பட்டனர்.
1995ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு முதல் இராணுவத்துடன் இணைந்து இராணுவ துணைக்குழுக்களாக இயங்கியவர்கள் , அவர்களின் தலைவர்கள் யாழில் நேற்று ஒன்று கூடி செம்மணிக்கு நீதி கோரி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். அவர்களுடன் , இன்னும் சிலரும் தற்போது இணைந்துள்ளார்.
செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற்று , அது தொடர்பிலான உண்மைகள் வெளி வரும் போது , போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள் கூட சிக்கவோ , பொறுப்பு கூற வேண்டியவர்களாகவோ இருக்கலாம். அப்படியிருக்கையில் , இவர்களின் போராட்டம் எந்த வகையில் நியாயமான வெளிப்படை தன்மையுடனான போராட்டமாக அமையும் ?
செம்மணி புதைகுழி வழக்கினை பொறுத்த வரையில் , நல்லூர் பிரதேச சபை சார்பில் , முன்னிலையாகவும் சட்டத்தரணி நான். எமக்கும் வழக்கு தொடர்பிலான கரிசனைகள் இருக்கின்றன.
அந்த வகையில் போராட்டம் முக்கியமானது. புதைகுழி வழக்கு விசாரணைகள் நடைபெற்று , குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற வகையில் , போராட்டத்திற்கான ஆதரவினை வழங்குவோம் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment