நாட்டில் தொடரும் தேடுதல் - ஆயிரக்க்கணக்கானோர் கைது - துப்பாக்கிகள் , போதைப்பொருட்கள் மீட்பு




போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் முழு மேற்பார்வையின் கீழ் இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்படும் தினசரி சோதனை நடவடிக்கைகளின் மற்றொரு கட்டம் நேற்று (15) இடம்பெற்றது. 

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளைச் சேர்ந்த 6,129 அதிகாரிகள் இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

இந்த சோதனைகளின் போது, 27,092 நபர்கள் சோதனை செய்யப்பட்டதுடன், 10,147 வாகனங்கள் மற்றும் 7,587 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன. 

இந்த சோதனைகளின் போது, போதைப்பொருள் தொடர்பாக 863 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதேநேரம், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 24 நபர்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 400 பேரும் கைது செய்யப்பட்டனர். 

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது 05 சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, 01, T-56 துப்பாக்கி, T-56 துப்பாக்கிக்கான 01 மெகசின், 14, T-56 தோட்டாக்கள், 01 பிஸ்டல் துப்பாக்கி, 01 மெகசின், 09, 2.5 mm தோட்டாக்கள், 09, 9 mm தோட்டாக்கள், 02 துப்பாக்கி மாதிரிகள், 03 வாள்கள் மற்றும் 02 கத்திகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

No comments