யாழில். ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் கோரியவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபரை கைது செய்யாது தவிர்க்க 20 இலட்ச ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மூவர் பொலிஸாரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்
மாதகல் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவர் மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தரினால் கைது செய்யப்பட்டார்.
கைதில் இருந்து குறித்த நபரை விடுவிக்க , 30 இலட்ச ரூபாய் பணம் இளைஞனிடம் லஞ்சமாக கோரியுள்ளனர். அதற்கு இளைஞன் சம்மதிக்காது , 20 இலட்ச ரூபாய் கொடுப்பதற்கு சம்மதித்ததை அடுத்து , இளைஞனை விடுவித்து , சங்கானையில் உள்ள மதுவரி திணைக்கள அலுவலகத்திற்கு வந்து பணத்தினை தருமாறு கூறி சென்றுள்ளனர்.
அதனை அடுத்து , தன்னிடம் லஞ்சம் கோரிய விடயம் தொடர்பாக இளைஞன் காங்கேசன்துறை பிரிவு குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
பொலிஸார், இளைஞனுடன் சிவில் உடையில் மதுவரி திணைக்களத்திற்கு சென்று , இளைஞனை ஒரு தொகை பணத்தினை கொடுக்க வைத்து , பணத்தினை பெற முயன்ற மூன்று அதிகாரிகளையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , லஞ்சமாக கொடுக்க முற்பட்ட ஒரு தொகை பணத்தினையும் சான்று பொருளாக பொலிஸார் மன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
Post a Comment