சுயவிருப்பின்பேரில் தாயகம் திரும்புவோரை கைது செய்யாதீர்கள் - அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்
“இலங்கையின் உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் அனுசரணையுடன் தாயகம் திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படுவதானது சர்வதேச சட்டங்களை மீறும் மிகமோசமான செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர். பத்மநாதன் சத்தியலிங்கம் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையின் உள்நாட்டுப் போர் காரணமாக மக்கள் தமது உயிரை காப்பாற்றுவதற்காக தமது பூர்வீக இடங்களில் இருந்து வெளியேறி உலகின் பல நாடுகளிற்கும் புலம்பெயர்ந்தனர்.
அவ்வாறே பெருமளவிலானோர் இந்தியாவிற்கு 1983 இனக்கலவரத்தின்போதும் அதன்பின்னராக குறிப்பாக 90 களிலும் சென்று இலங்கை ஏதிலிகளிற்கான முகாம்களில் தங்கியிருந்தனர். இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வரமுன்னரும், வந்தபின்னரும் அவர்கள் தங்கள் சுயவிருப்பின்பேரில் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் கொண்டிருந்தனர். அந்தவகையில் சுயவிருப்பின் அடிப்படையில் இலங்கை வந்தவர்கள் பல இன்னல்களிற்கு முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
குறிப்பாக அவர்களது காணிகள் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத நிலையில் யுத்தம் முடிவடைந்தபின்னர் பல்வேறு அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தங்கியிருந்தனர். அத்துடன் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
இலங்கை திரும்பும்போது அகதிகளிற்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் அவர்களது சொந்த செலவில் சிலகாலங்கள் தங்கியிருந்து வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத நிலையில் மீண்டும் அகதியாக இந்தியா சென்ற வரலாறு உள்ளது. ஆனால் தற்போது இப்பிரச்சனைகளிற்கு மேலாக புதியதோர் பிரச்சினை இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது அகதிகளிற்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தின் அனுசரனையுடன் சுயவிருப்பின்பேரில் நாடு திரும்பும் ஏதிலிகள் இலங்கைக்குள் வந்ததும் கைது செய்யப்படுகிறார்கள். இது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயற்பாடாகும்.
அண்மையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலும் கடந்த 12.08.2025 அன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலும் இவ்வாறான கைதுகள் இடம்பெற்றுள்ளது. இவர்கள் இலங்கை வரும்போது சம்பந்தப்பட்டவர்களின் குற்றவியல் வரலாற்றுப் பின்னணி ஆராயப்பட்டே இலங்கைக்கு மீளத்திரும்புவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள்.
அவ்வாறிருக்கும்போது இவர்கள் கைது செய்யப்படுவதன் நோக்கம் என்ன? மேற்குறிப்பிட்டவர்கள் இந்திய அரசால் முகாம்களில் பராமரிக்கப்பட்டு, இலங்கை அரசால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தின் அனுசரனையுடன் நாட்டிற்குள் வருபவர்கள். ஆகவே சட்டநடைமுறைகளை பின்பற்றி தாயகம் திரும்புபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களது கண்ணியத்தை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும்.
அண்மைக்கால கைதுகளால் சுயவிருப்பின்பேரில் ஏதிலிகளை சொந்த நாட்டிற்கு கொண்டு வருகின்ற தமது செயற்பாட்டை ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியிடம் நான் நேரடியாக பேசியபோது விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாகவும் அவருடன் பேசும்படியும் கூறினார்.
எனவே சுயவிருப்பில் இலங்கை வரும் ஏதிலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அவர்களை கண்ணியத்துடன் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என இவ் உயரிய சபையை கேட்டுக்கொள்கிறேன். கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் விரைவில் அவர்களை இவ்வழக்குகளில் இருந்து விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் வடக்கு மாகாண மீள்குடியேற்றத்திற்கான அமைச்சராக குறுகிய காலம் பணியாற்றியபோது “வடக்கு மாகாணத்திற்கான மீள்குடியேற்றக்கொள்கை” ஒன்றை தயாரித்து மத்திய மீள்குடியேற்ற அமைச்சிற்கு அனுப்பியிருந்தோம்.
அதனடிப்படையில் மத்திய அமைச்சினாலும் இவ்வாறான கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால் இவ்வேலைத்திட்டம் சில காரணிகளினால் முற்றுப்பெறவில்லை.
எனவே காணி, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கிய நாட்டிற்கான புதிய மீள்குடியேற்ற கொள்கை ஒன்றை தயாரிப்பதனூடாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களையும், வெளிநாடுகளிற்கு ஏதிலிகளாக சென்று சுய விருப்பின்பேரில் நாடு திரும்புபவர்களையும் அவர்களது பூர்வீக இடங்களில் மீளக்குடியேற்ற ஏற்பாடுகளை செய்யவேண்டும் என இவ் உயரிய சபையை கோருகிறேன்.
இச்செயற்பாடு நிரந்தர சமாதானத்திற்கும், எமது நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் வழிவகுக்கும் என தெரிவித்தார்.
Post a Comment