திருகோணமலையில் தமிழரசுக் கட்சி , முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. 

குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்தௌபீக் மற்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

குறித்த ஒப்பந்தத்தில் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இரு கட்சிகளும் தலா இரண்டு வருடங்களை பகிர்ந்து கொள்வதெனவும், மூதூர் பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவது என இணங்கிக் கொண்டுள்ளனர்.

அதேபோன்று குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்; உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீ தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவது எனவும் இணங்கி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக் கொண்டனர்.

இதைவிட திருகோணமலை மாநகரசபை, நகரமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்; ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments