நான்கு கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா


ரஷ்ய எல்லையில் உள்ள 4 கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளதாக உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் ஆளுநர்  தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தொடர் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி இருப்பதுடன் எல்லையோர உக்ரைன் கிராமங்களை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைனின் கார்கிவ், சுமி மற்றும் செர்னிஹிவ் பகுதிகளை ஒட்டியுள்ள ரஷ்யாவின் பகுதிகளுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்காக இடையக மண்டலங்கள் உருவாக்கப்படும் என்று புடின் கூறினார்.

போர் ஆரம்பித்த காலத்தில், உக்ரைன் படைகள், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை கைப்பற்றியதாக அறிவித்தன. குர்ஸ்க் பகுதியின் எல்லையான சுமி என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த இடையக மண்டலத்தை உருவாக்க ரஷ்யா முயன்று வருகிறது. இதன் எதிரொலியாக ரஷ்யா, உக்ரைன் எல்லையில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அடுக்கடுக்கான குண்டுவீச்சு மற்றும் டிரோன் தாக்குதலால் உக்ரைனின் எல்லையோர 4 கிராமங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது. இருந்தபோதிலும் அந்த கிராமங்களில் மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்றும், உக்ரைனுக்குள் முன்னேற ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் இராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. 

முன்னதாக ரஷ்யா-உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தனித்தனியே பேசினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், தானாக பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இருநாட்டு முக்கிய பிரதிநிதிகள் கூடி, போர்க்கைதிகளை விடுவிப்பது என்று உடன்பாடு செய்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள், சிறைபிடிக்கப்பட்ட இராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 1,000 பேர் பரிமாறிக் கொள்ளப்பட்டனர்.

இருந்தபோதிலும் இதே நாட்களில் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. திங்கட்கிழமை இரவில் மட்டும் 355 டிரோன்களை வீசி சரமாரியாக ரஷியா தாக்கியது. மொத்தம் 4 நாட்களில் 900 டிரோன்கள் ஏவப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது.

இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்தார். ரஷிய அதிபர் புதினுக்கு ஏதோ ஆகிவிட்டது. காரணமில்லாமல் உக்ரைன் பொதுமக்களை கொன்று குவிக்கிறார் என்று வலைத்தளத்தில் பதிவிட்டார்.

No comments