ஜே.வி.பி. உட்பட சிங்களக் கட்சிகளை தமிழ் மண்ணில் அடையாளப்படுத்திவிட்டு எவ்வாறு தமிழ்க் கட்சிகளுடன் இணைவது? பனங்காட்டான்


2018ல் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. முதன்முதலாக நடத்திய மே தின ஊர்வலத்தின் முன்வரிசையில் செஞ்சட்டையுடன் சென்றவரும், 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்களவரான சஜித் பிரேமதாசக்கு வாக்குச் சேகரிக்கும் பிரதான முகவராக செயற்பட்டவருமான சுமந்திரன், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும்? 

தமிழ்த் தேசியத்துக்கான இன்னொரு பரீட்சைக்களமாக நாளைய மறுநாள் மே மாதம் ஆறாம் திகதி அமையவுள்ளது. ஏழாண்டுகளுக்குப் பின்னர் இடம்பெறவுள்ள உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நாள் இது. 

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் ஐந்து டசின் சபைகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. எனினும், யாழ்ப்பாணம் மாநகர சபையையும், குடாநாட்டிலுள்ள பிரதேச சபைகளையும் யார் கைப்பற்றுவது என்பது அரசியல் போட்டி என்பதைவிட தன்மானப் பிரச்சனை மேலோங்கியுள்ளது. 

கடந்த வருட நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக பல தமிழர்களை தங்கள் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்தது போன்று, நாளை மறுநாள் தேர்தலில்  உள்ளூராட்சிச் சபைகளின் உறுப்பினர் பதவிகளையும் கைப்பற்ற வேண்டுமென்ற முனைப்புடன் அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி பரப்புரைகளை மேற்கொண்டுள்ளது. 

வழமையான தேர்தல்கால காற்றில் பறக்கும் உறுதிமொழிகளுடன் காணிகள் விடுவிப்பு, மக்கள் சந்திப்பு என வெவ்வேறு வகைகளில் வாக்கு வேட்டை இடம்பெறுகிறது. வண்டிலுக்குப் பின்னால் மாட்டைக் கட்டி ஓட்டுவது போன்று சில தமிழ் கட்சிகள் வேகம் காட்டுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டை விட்டதுபோல இத்தேர்தலிலும் முடிவுகள் ஆகிவிடக்கூடாது என்ற அங்கலாய்ப்பு இவர்களிடம் காணப்படுகிறது. 

இடையிடையே இனநலன் சார்ந்த ஒற்றுமைக் கோசம் இப்போது கேட்கிறது. ஆனால், இந்த ஒற்றுமை தேர்தலுக்கு முன்னரா அல்லது தேர்தலுக்குப் பின்னரா என்ற கேள்வி இதனோடு சேர்ந்து வருகிறது. 

அநுர தரப்பை தோற்கடிக்க வேண்டுமெனில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு தேர்தலைச் சந்திக்க வேண்டுமென்பது தவிர்க்க முடியாதது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், நீயா நானா என்ற போட்டி மனப்பான்மை அனைத்தையும் தடுக்கிறது. 

இலங்கையின் முதலாவது தமிழ் அரசியல் கட்சியான தமிழ்க் காங்கிரஸ் ஸ்தாபகர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனான தற்போதைய காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒற்றுமை முயற்சிக்கு முன்மொழிந்து வருகிறார். இதற்காக தமிழரசின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் வீடு தேடிச் சென்று பேச்சு நடத்தினார். இன்றைய நெருக்கடியான தமிழ் அரசியலில் இது ஒரு முன்மாதிரியான வரவேற்கப்பட வேண்டிய செயற்பாடு. 

இந்த முயற்சியை ஒரு வகையில் வரவேற்ற சி.வி.கே.சிவஞானம் இதுபற்றி ஆராய தமது கட்சியில் ஒரு குழுவை நியமித்துள்ளதாக கஜேந்திரகுமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் தமிழரசின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் மருத்துவ காரணங்களைக் கூறி இப்பதவியிலிருந்து விலகினார். (மருத்துவரான சத்தியலிங்கம் தமது எம்.பி. பதவியை மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்யவில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.) புதிய பதில் செயலாளராக சுமந்திரன் பதவியேற்றார். அடுத்த சில நாட்களில் சி.வி.கே.சிவஞானத்திடமிருந்து கஜேந்திரகுமாருக்கு ஒரு தகவல் சென்றது. ஒற்றுமை முயற்சி பற்றி பின்னர் யோசிக்கலாம் என்பது இந்தத் தகவல். அரசியல் நோக்கர்களின் பார்வையில் சுமந்திரனின் வழிநடத்தலில் சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு செயற்படுகிறார் என்பது முக்கிய தகவலாக கசிந்துள்ளது. 

மறுதரப்பில், உள்ளூராட்சித் தேர்தலை சந்திக்கவென கஜேந்திரகுமார் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவைக்கு கணிசமான ஆதரவு அதிகரித்து வருவதை தமிழ் ஊடகங்கள் ஊடாக அவதானிக்க முடிகிறது. உத்தியோகப்பற்றற்ற சில கருத்துக் கணிப்புகளும் இதனை உறுதிப்படுத்துகிறது. எனினும், இத்தேர்தலை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து முன்னெடுப்பதில் அவர் உறுதியாகவுள்ளார். 

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னரும் இவரால் ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது. அதிலும் தமிழரசுக் கட்சியுடன் கொள்கை ரீதியாக இணைவதற்குத் தாம் தயாராக இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல எனவும், அதன் தலைமைத்துவம் தவறாக நடப்பதால் ஒட்டுமொத்தக் கட்சியும் தவறான பாதையில் கொண்டு செல்லும் நிலைமையே இங்கு காணப்படுகிறது எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழரசுக் கட்சியை தோற்கடித்து முற்றுமுழுதாக ஓரங்கட்டும் செயற்பாடு அல்லவென்றும், அப்படிச் செய்ய முடியாது - செய்யவும் கூடாது எனவும் தெரிவித்திருக்கும் இவரது அறிக்கை ஊடாக தேசிய உணர்வு என்பது நன்கு பகிரப்பட்டுள்ளது. ஆனால், தமிழரசுக் கட்சியைப் பொறுத்தளவில் அது தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒற்றுமை என்ற விடயத்தில் நேர்கோட்டில் நிற்பதாகத் தெரியவில்லை. 

இத்தேர்தலை ஒட்டி வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் காலத்தோடு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. எமது மக்களுக்காக ஏதோவொரு வழியில் உழைத்த தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளுக்கு வாக்களித்து அவர்களுக்கு கரம் கொடுக்க வேண்டுமென இதில் கேட்கப்பட்டுள்ளது. உள்;ராட்சி என்பது எமக்கான அதிகாரங்களைக் கொண்ட கட்டமைப்பு என்பதால் தமிழ்த் தேசியத்திலிருக்கும் ஒரு தரப்பினரே இதனை ஆளுகை செய்ய வேண்டுமென இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனூடாக தமிழ்த் தேசியத்தின் வலிமை காண்பிக்கப்பட வேண்டுமென்பது இவர்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது. 

இந்தக் கருத்து மிக முக்கியமாக இறுதி நேரத்திலாவது வாக்காளர்களால் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டியது. பொது எதிரியை அடையாளம் கண்டு, அந்த எதிரியை தமிழ் மண்ணில் காலூன்ற விடாது தடுக்க வேண்டுமெனில் தமிழ் வாக்குகள் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கே இடப்பட வேண்டுமென்பது காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினரின் உரிமைசார்ந்த கோரிக்கை. 

யார் என்னதான் சொன்னாலும் தமிழரசுக் கட்சிக்குள்ளிருக்கும் போட்டியையும் பிளவையும் எவராலும் தீர்க்க முடியாதுள்ளது. கட்சியின் தலைவராகத் தெரிவான சிறீதரனையும், இப்போட்டியில் தோல்வியடைந்த சுமந்திரனையும் தேர்தல் பரப்புரைக்காக ஒரே மேடையில் ஏற்றுவதற்கு சி.வி.கே.சிவஞானம் எடுத்த முயற்சி இதுவரை பயனளிக்கவில்லை. 2020ம் ஆண்டுத் தேர்தலில் படுதோல்வியடையவிருந்த சுமந்திரனை தமது ஆதரவாளர்களின் வாக்குகளால் காப்பாற்றிய சிறீதரனை கட்சியிலிருந்து நீக்கவும், அரசியலிலிருந்து துரத்தவும் முயற்சிக்கும் சுமந்திரனுடன் எவ்வாறு இணைந்து அவரால் செயற்பட முடியுமென கிளிநொச்சி மக்கள் கேட்கின்றனர். 

இந்த நெருக்கடிக்குள்ளும் தம்மையே கட்சியின் முக்கியஸ்தராகக் காட்டும் சுமந்திரன், அநுர குமர தரப்பினருக்கு சவால் விடும் அறிக்கைகளையும், உரைகளையும் மேற்கொண்டு வருகிறார். இது காலத்தின் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முள்ளவாய்க்கால் மௌனத்துக்குப் பின்னர், தென்னிலங்கைக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் தமிழர் தாயகத்தில் அறிமுகப்படுத்துபவராகவும் - ஒருவகையில் அவர்களின் முகவராகவும் இருந்தவர் யார் என்ற கேள்வி வரும்போது அங்கு; சுமந்திரனே முன்னால் நிற்கிறார். 

2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை, அவர் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் என்றும் கருதாது ஓர் எதிரியாகப் பார்த்;தது மட்டுமல்லாது, சிங்களக் கட்சியொன்றின் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக தமிழ் வாக்குகளைப் பெற்று கொடுப்பதில் தலைமையாளராக இயங்கியவர் சுமந்திரன் என்பதை இலகுவாக மறந்துவிட முடியாது. 

2018ம் ஆண்டு மே தின விழாவை முதன்முறையாக ஜே.வி.பி. யாழ்ப்பாணத்தில் நடத்தியது. இந்த மே தின பேரணியில் செங்கொடிகளை ஏந்தியவாறு செஞ்சட்டையுடன் ஜே.வி.பி.யினர் பல நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர். கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்;கான அறிமுக நிகழ்வாக ஜே.வி.பி. அந்த மே தினத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தியது. இந்தப் பேரணியில் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அநுர குமர திஸ்ஸநாயக்க ஆகியோரோடு முன்வரிசையில் கைகோர்த்துச் சென்ற ஒரேயொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமே. தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு இணங்கவே தாம் ஜே.வி.பி. பேரணியில் பங்கேற்பதாக ஊடகச் செவ்வியொன்றில் இவர் தெரிவித்திருந்ததும் கவனத்துக்குரியது. 

கடந்த காலங்களில் இனவாதமும் , மதவாதமும் கொண்ட சிங்களக் கட்சிகளுடன் இணைந்து அவர்களை தமிழ் மண்ணில் காலுன்ற முக்கிய காரணியாக இருந்த சுமந்திரனும் அவரது தமிழரசுக் கட்சியும் எவ்வாறு தமிழ்த் தேசிய கட்சிகளோடு இணைந்து உள்;ராட்சித் தேர்தலை சந்திக்க முடியும்? இதுதான் இன்றைய ஒற்றுமை முடியாமைக்கான காரணமெனில் அதில் நியாயமுண்டு.

No comments