யாழில். பெண்ணொருவரின் கணவரை வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்த பெண் கைது
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த பெண்ணிடம் தனது கணவரை கனடா அனுப்பி வைக்குமாறு கூறி 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கடந்த 2023ம் ஆண்டு பெண்ணொருவர் வழங்கியுள்ளார்.
பணத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் குறித்த பெண் ஊரில் இருந்து தலைமறைவாகியுள்ளார். அதன் பின்னரே தாம் பணம் கொடுத்து ஏமார்ந்து விட்டோம் என உணர்ந்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த வேளை பணத்தினை பெற்றுக்கொண்ட பெண் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்தமையால் கடந்த 2024ஆம் ஆண்டு கிளிநொச்சி நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தொடர்ந்து , பணம் பெற்றுக்கொண்ட பெண்ணுக்கு பயணத்தடை விதிக்ககோரியும் , திறந்த பிடியாணை பிறப்பிக்க கோரி இருந்த நிலையில் , நீதிமன்று அதனை ஏற்று பயண தடை விதித்ததுடன், திறந்த பிடியாணையும் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் குறித்த பெண் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை செம்பியன்பற்று பகுதிக்கு வந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பெண்ணை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த நபர் அதே பகுதியில் பலரிடம் மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.
Post a Comment