தேனிலவின்போது நல்லாட்சி தராததை தேர்தல் விஞ்ஞாபனம் தரப்போகிறதா? பனங்காட்டான்
'இலங்கை-இந்திய 13ம் திருத்தம் அப்போதைய காலத்துக்குத் தேவையானது. ஆனால், இப்போது அது பொருத்தமற்றது' என்று 2018ம் ஆண்டில் தமிழரசுத் தலைவராகவிருந்த இரா.சம்பந்தனிடம் நேரடியாக இந்தியா தெரிவித்ததை இப்போது நினைவுக்குட்படுத்தினால், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தமிழர் வாக்குகளை காத்திரமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியதன் உள்ளார்ந்த அர்த்தத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் மூன்று வாரங்கள் உள்ளன. ஊடக மொழியில் குறிப்பிடுவதானால் சூடு பிடித்திருக்கும் பரப்புரை வரப்போகும் வாரங்களில் சூறாவளியாக மாறும்.
தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் சுமார் 20 வரையானவர்களை காணவில்லையாம். பலரது வேட்புமனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கங்கள் பாவனையில் இல்லாதுள்ளனவாம். இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் மூன்று முதல் ஐந்து வரையானவர்கள் பினாமிகளாக போட்டியிடுகின்றனராம். இவர்களுக்குக் கிடைக்கும்(?) விருப்பு வாக்குகளை யாரோ ஒரு வேட்பாளருக்கு சேர்ப்பதற்கான முயற்சி இதுவென்று சொல்லப்படுகிறது.
ரணில், சஜித், அநுர, நாமல் ஆகிய நான்கு வேட்பாளர்கள் தினமும் ஏதோ ஒரு கூட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆரம்பக் கணிப்புகளின்படி சஜித்துக்கும் அநுரவுக்குமிடையே கடும்போட்டி என்றும், ரணில் இப்போது மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கணிப்பீடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது பற்றி அண்மைய இந்திய தேர்தலின்போது விரிவான ஒரு கட்டுரை வெளியானது. அதன் சாராம்சம் வருமாறு:
'முக்கியமான அபேட்சகர்களின் ஆதரவான அமைப்புகள் நடத்தும் கருத்துக் கணிப்புகள் அந்த அபேட்சகருக்கு ஆதரவாக கணிப்பினை வெளியிடும். யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காது இருக்கும் வாக்காளர்களை தம்பக்கம் இழுப்பதற்கென்று இந்த முயற்சி. இதற்கு எதிர்மாறாக தமக்கு சார்பான வேட்பாளர் முன்னணியில் நிற்பதாகக் கூறாது, தோற்கடிக்க விரும்பும் வேட்பாளரை வெற்றியை நோக்கிச் செல்வதாக அறிவிக்கும் எதிர்தரப்பினரின் கருத்துக்கணிப்பு. இதனூடாக புதிய வாக்குகள் அவருக்குச் செல்வதை தடை செய்யும் முயற்சி இது" - இவ்வாறு அந்தக் கட்டுரை தெரிவித்திருந்தது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக வெளிவரும் கருத்துக் கணிப்புகள் மேற்சொன்ன இரண்டு வகைகளுக்குள்ளும் ஏற்றவையாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. நான் உங்கள் மூத்த மகன் வருகிறேன் என்று கூறியவாறு சிங்கள வாக்காளர்களை நோக்கி நடைபோடும் நாமல் ராஜபக்ச போர் வெற்றியையும், படையினரைப் பாதுகாப்பதையும் முதன்மைப்படுத்தியவாறு தனது பரப்புரையை மேற்கொள்கிறார்.
அநுர குமார திசநாயக்கவும் கிட்டத்தட்ட அதே பாணிதான். இவர் தரப்பில் படைத்துறையின் முன்னாள் அதிகாரிகள் பலர் இணைந்துள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற கொலைகளுக்கு நீதி வழங்கப்படும் என்று தெரிவித்துவிட்டு, போர்க்குற்றம் புரிந்தவர்களையும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களையும் தண்டிக்க முடியாதென்றும் அறிவித்துள்ளார். ஜெனிவாவின் தீர்மானம் எதனை நீதியாகக் கொள்கின்றதோ அதனை மறுக்கும் அபேட்சகராக அநுர குமார காட்சி தருகிறார்.
போரை வெற்றி கொண்ட நாயகன் தாமே என்று மார்தட்டும் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெறும் கதிரைகளைப் பார்த்து உரையாற்றும் பரிதாப நிலைக்கு வந்துள்ளார். அதேசமயம், வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
பொருளாதார அபிவிருத்தியை மையப்படுத்தியாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தாம் ஜனாதிபதியாகத் தொடர ஆதரவு கேட்கிறார் ரணில். மகாநாயக்கர்களிடம் கையளித்த பின்னர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச. நாமலின் விஞ்ஞாபனமும் விரைவில் வரவுள்ளதாம். இதுவரை வெளியான - இனி வரவுள்ள எந்தவொரு சிங்களவரின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சமஷ்டி பற்றி எதுவுமே இருக்காது என்பது பகிரங்கமாகியுள்ளது.
எந்தவொரு தேர்தலின்போதும் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது கட்சிகளால் வெளியிடப்படும். இதனை ஆங்கிலத்தில் லெக்ன் மனிஃபெஸ்ரோ என்பர். ஓர் அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் எவற்றைச் செய்ய கருதுவதாகத் தெரிவிக்கும் எழுத்து மூலமான அறிக்கை அல்லது கட்சியின் கொள்கை விளக்க அறிக்கை இதுவென்று ஒக்ஸ்ஃபோட் அகராதி தெரிவிக்கிறது. முக்கியமாக பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, சட்டம் மற்றும் ஒழுங்கு, சூழல் பாதுகாப்பு போன்றவைகளை எவ்வாறு நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தலாம் என்பவைகளை தேர்தல் விஞ்ஞாபனம் தெரிவிப்பதாக இருக்க வேண்டும்.
ஆனால், இப்போது வெளிவரும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இவைகளை காணமுடியாது. பெரும்பான்மை இனத்தை குளிர்ச்சிப்படுத்தி அவர்களின் வாக்குகளை அபகரிப்பதையே இவை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனவே தமிழினம் தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக சிங்கள வேட்பாளர்களில் எவரையும் நியாயமானவர்களாக அடையாளம் காணமுடியாது.
இவ்வகையான சீத்துவக்கேடான அரசியல் போக்கில், பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பார்த்த பின்னரே தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும் என அதன் எம்.பி.க்களில் ஒருவரான சுமந்திரன் கூறி வருவதும், அவருடன் ஒத்தூதும் சகாவான சாணக்கியன் அதனை வழிமொழிவதும் தமிழ் மக்களை பெரும் இடருக்குள் தெரிந்து கொண்டே தள்ளிவிடும் முயற்சி.
இதனை நன்குணர்ந்து கொண்ட தமிழ் மக்கள் இப்போது தாமாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டதை காணமுடிகிறது. தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதென அடுத்தடுத்து தமிழரசுக் கட்சியின் இரண்டு மாவட்டக் கிளைகள் முடிவெடுத்துள்ளன. பொதுவேட்பாளர் அரியநேத்திரன் செல்லுமிடமெங்கும் தமிழ் மக்கள் தன்னெழுச்சி கொண்டு அவருக்கு வரவேற்பு வழங்கி வருவதை பாரிய மாற்றம் என்றே கூற வேண்டும்.
தமிழரசின் மூத்த தலைவர் என்று மதிக்கப்பட்ட இரா.சம்பந்தனின் திருகோணமலையின் தமிழரசு மாவட்டக் கிளை தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதென முடிவெடுத்து பகிரங்கமாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது. திருமலையின் புதிய எம்.பி. குகதாசனும் இந்த முடிவை ஏற்று அங்கீகரித்துள்ளார். அடுத்து கிளிநொச்சி தமிழரசு மாவட்டக் கிளையும் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அத்துடன் அரியநேத்திரனுக்கு கிளிநொச்சியின் பல இடங்களில் பெருவரவேற்பையும் அளித்துள்ளது. கிளிநொச்சி எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் பொதுவேட்பாளரை ஆதரித்த நிலையில் அவரது தொகுதியின் மாவட்டக் கிளை அவரது நிலைப்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும் இதனைச் சொல்லலாம்.
இதுவரை காலமும் சிங்கள வேட்பாளர்களை தமிழர்கள் ஆதரித்து வாக்களித்தனர். ஆனால், தொடர்ந்து தமிழர்கள் ஏமாற்றப்பட்டதே வரலாறு. இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியதன் மூலம் தமிழர் அனைவரும் பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி.யான தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் சிறீநேசன்.
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவான பரப்புரைகள் ஆர்பாட்டமின்றி வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகிறது. மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஒருபோதும் செயற்பட மாட்டோமென்று அழுத்தமாகக் கூறியுள்ளார் அத்தொகுதியின் தமிழரசு எம்.பி.யான கலையரசன்.
கடந்த வாரம் இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தமிழ் அரசியல்வாதிகள் சிலரை சந்தித்தபோது தெரிவித்த கருத்து இப்போது பலவாறாக விமர்சிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை தேர்தலின்போது காத்திரமான வழியில் பயன்படுத்த வேண்டுமென அவர் கூறியதாக அவரைச் சந்தித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை-இந்திய 13ம் திருத்தம் அப்போதைய காலத்துக்குத் தேவையானது. ஆனால், இப்போது அது பொருத்தமற்றது என்று 2018ம் ஆண்டில் தமிழரசு தலைவராக இருந்த இரா.சம்பந்தனிடம் நேரடியாக இந்தியா தெரிவித்ததை இப்போது நினைவுக்குட்படுத்தினால் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தமிழர் வாக்குகளை காத்திரமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியதன் உள்ளார்ந்த அர்த்தத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்று இந்திய தரப்பில் நேரடியாகக் கூற முடியாது. அவ்வாறு கூற வேண்டுமென எதிர்பார்க்கவும் முடியாது. 13ம் திருத்தம் இப்போது பொருத்தமற்றது என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்த இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ராஜதந்திரப் பாசையில் சொல்ல வேண்டியதை சொல்லியுள்ளார் என்றே கருதப்பட வேண்டும்.
நல்லாட்சி அரசுடன் தேனிலவைக் கழித்தபோது பெறமுடியாது போனதை தேர்தல்கால விஞ்ஞாபனம் என்று கூறப்படும் கொள்கை அறிக்கையில் கிடைக்குமென எதிர்பார்ப்பது தமிழ் மக்களை எத்திப் பிழைக்கும் அரசியல் போக்கு. தமிழரசின் இன்றைய பரிதாப நிலைக்கு அவர் ஒருவரே காரணம் என்று தமது தீர்ப்பை வழங்கியுள்ளார் திரு.சி.வி.விக்னேஸ்வரன். தமது மாணவன் பற்றி அவரது ஆசான் கூறியதை வீட்டுக்குள் இருக்கும் எவரும் எதிர்க்கும் நிலை இன்றில்லை.
Post a Comment