வியாழேந்திரன் மேடையேற தடை!
தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை அரச நிகழ்வுகளில் பங்கெடுக்க கிழக்கு ஆளுநர் தடைவிதித்துள்ளார்.
இதனிடையே மட்டக்களப்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரையும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (2) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பில் ஆற்று மண் அகழ்வதற்கான அனுமதி வழங்க கட்டிட ஒப்பந்தகார் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரை நேற்று (1) கல்லடி கடற்கரையில் மறுவேடத்தில் இருந்த இலஞ்சஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலன்னறுவை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்ட இலஞ்ச ஊழில் ஆணைக்குழுவினர், இவர்கள் இருவரையும் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
அதனையடுத்து 15 ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறும் அவர்கள் இருவரையும் கொழும்பு நீதிமன்றில் விண்ணப்பிக்குமாறும் அவர்களை இங்கிருந்து கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சிறைச்சாலை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினருக்கு கட்டளையிட்டு உத்தரவிட்டார்.
முன்னதாக வியாழேந்திரனின் சகோதரனும் மணல் ஏற்றும் அனுமதிக்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியிருந்தார்.
Post a Comment