யாழ்..காரைக்கால் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தில் நேற்று தீ - இன்று போராட்டம்


யாழ்ப்பாணம் இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால் , அப்பகுதி மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாக இணுவில் காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையம் அமைந்துள்ளது. அதனை அகற்றுமாறு கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதேவேளை நேற்றைய  தினம் திங்கட்கிழமை இரவு திடீரென குறித்த நிலையத்தில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த கழிவுகள் தீ பிடித்து எரிந்தன. 

யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து பலத்த போராட்டத்தின் மத்தியில் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் குறித்த நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் , இது விஷமிகளின் செயற்பாடா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 






No comments