உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை கொண்டு அரசியல் இலாபம் பெறாதீர்கள்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை கொண்டு நாட்டிலுள்ள தலைவர்கள் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் இடம்பெற்ற தழிழ் இன படுகொலைக்கு குரல் கொடுக்காத தலைவரகள் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு குரல் கொடுப்பது வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 04 வெளியிட்ட காணொளி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் இந்த தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

நாங்களும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த நிலையில், கர்தினால் உள்ளிட்ட அனைவரும் நாட்டில் புரையோடிப்போய்யுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எண்ணி இருந்திருந்தால், கடந்த காலங்களிலே ஏற்பட்ட இனப்பிரச்சினை மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments