யாழில் இருந்து துபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி




நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைக்குலைகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை  நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

யாழ் குடாநாட்டில் கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைப்பழங்கள் நிலாவரையில் உள்ள வாழைப்பழம் சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு அங்கிருந்து நேரடியாக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வாழைப்பழங்கள் துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவாணி கிடைப்பதோடு உள்ளூர் விவசாயிகளுக்கும் பெரிதும் நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிலோ வாழைக்குலைகள் வாரந்தோறும்  ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டமானது அனுராதபுரம் ராஜாங்கனை வாழைப்பழ ஏற்றுமதி திட்டத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments