யாழ்.நகர் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து 20 கிலோ பழுந்தடைந்த உணவுப் பொருட்கள் மீட்பு!


யாழ்ப்பாணம் , வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இருந்து கோழி இறைச்சி , றொட்டி , சோறு என சுமார் 20 கிலோ கிராம் உணவுகளும் , பழுதடைந்த பழங்களும் பொது சுகாதார பரிசோதகரால் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த உணவகத்தில் உணவினை வாங்கிய நபர் ஒருவர் , அங்கு தனக்கு பழுதடைந்த உணவையே விற்றனர் என யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகருக்கு முறையிட்டுள்ளார். 

அதனை அடுத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த உணவகத்தினை பொது சுகாதார பரிசோதகர் சோதனையிட்ட போது , உணவகத்தில் இருந்து பழுதடைந்த உணவு பொருட்கள் மீட்கப்பட்டதுடன் , உணவகத்தில் உணவை கையாளும் தொழிலாளர்கள் இருவர் மருத்துவ சான்றிதழ் பெறாமை, மற்றும் கடையில் சில சுகாதார சீர்கேடுகள் என்பவை, பொது சுகாதார பரிசோதகரால் அடையாளம் காணப்பட்டது.

அதனை அடுத்து உணவகத்தில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்து , உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து , உரிமையாளரை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று , மீட்கப்பட்ட உணவு பொருட்களை அழைக்குமாறு கட்டளையிட்டதுடன் வழக்கினை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. 




No comments