சிவனே முழு முதல் கடவுள்!



இற்றைக்கு 6000 ஆண்டுகளிற்கு முன் சிந்துவெளியில் உறுதி செய்யப்பட்டிருக்கும் சிவ வழிபாட்டு சான்றுகள் உலகின் ஆதி சமயம் என்பதையும் தொல் தமிழரின் முதல் சமயம் என்பதையும்  உறுதி செய்கின்றது. 

தொல் தமிழரின் நனி சிறந்த நாகரிகமாக சிந்துவெளி நாகரிகம்  கொள்ளப்படுகின்றது.

இன்றைய வட மேற்கு இந்தியா மற்றும் கிழக்கு பாகிஸ்தான் வரை சிந்து நதி ஆற்றுப்படுக்கையில் பரந்து காணப்படும்  இந்த நாகரிகத்தின் மொகஞ்சதாரோ அரப்பா நகரிகங்களில் கண்டடெடுக்கப்பட்ட இலிங்கங்களும் பசுபதி உருவமும் நந்தி இலட்சினைகளும் அதனை உறுதி செய்கின்றன என்கிறார் பன்னாட்டு ஆராய்ச்சியாளர் சேர் ஜோன் மார்சல்.

பசுபதி இலட்சினையை பிற்கால சைவ சித்தாந்த மெய்யியலின் தோற்றுவாயாகவோ ஆதி சைவத்தின்  இறைகோட்பாடாகவோ கொள்ளமுடியும் . பரவலாக கண்டறியப்பட்ட தாய் தெய்வ,

நந்தி, மர வணக்க இலட்சினைகள் இன்றைய சைவம் அன்றே கட்டுக்கோப்பாக வளர்ந்து விட்டதை காட்டி நிற்கின்றது.

அதிலும் குறிப்பாக சிவ சக்தி குறியீட்டு மரங்களான அரச, வேப்ப மர வழிபாடுகளும் அரச மரத்தின் கீழ் நந்தி வழிபாடும் திருமூலரின் நந்தி மரபையும் திருமூலர்  அமர்ந்து  திருமந்திர 

உபதேசம் செய்த சிவபோதியாகிய அரச மர பண்டைய சிவ நந்தி மரபு பாரம்பரியத்தையினது ஊற்றுக்கண்ணையும் சிந்துவெளியிலையே நாம் கண்டு விட்டோம் எனலாம் .

தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்களின் ஒருவரான முனைவர் இராசமாணிக்கனாருடைய குறிப்புக்களை கீழே தருகின்றோம்

சிவ வணக்கம்

சிந்து வெளி மக்கள் லிங்க வணக்கத்தினர் என்பதை, அங்குக் கிடைத்த பல லிங்கங்களைக் கொண்டு அழுத்தமாகக் கூறலாம். இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசரது உருவம் கிடைத்துள்ளது. ஒரு முத்திரையில், மூன்றுமுகங்களைக் கொண்டமனித உருவம் ஒன்று, கால்களை மடக்கி இரு குதிகால்களும் ஒன்று சேர்ந்து காற் பெரு விரல்கள் கீழ்நோக்கி உள்ளவாறு ஆசனமிட்டு யோகத்தில் அமர்ந்திருப்பதுபோலக் காணப்படுகின்றது. மார்பில் முக்கோண வடிவப் பதக்கங்கள் காணப்படுகின்றன. கைகள் நிறையக் கடகங்கள் பூட்டப்பட்டுள்ளன. இடுப்பில் இரட்டைப் பட்டையாக ஒர் அரைக் கச்சை காணப்படுகிறது. இவ்வுருவத்தின் வலப்புறம் யானையும் புலியும், இடப்புறம் எருதும் காண்டாமிருகமும் நிற்கின்றன. இருக்கையின் அடியில் இரண்டு மான்கள் இருக்கின்றன.[5] யோகியின் தலைமீது வளைந்த எருமைக் கொம்புகள் உள. நடுவில் தடித்த மலர்க் கொத்தோ இலைக் கொத்தோ நிமிர்த்தி வைக்கப்பட்டுள்ளது. ‘இது சிவனைக் குறிப்பது’ என்று சர் ஜான் மார்ஷல் கருதுகிறார். தலைமீதுள்ள கொம்புகளும் பூங்கொத்தும், பிற்காலத்தில் திரிசூலமாக மாறியிருத்தல் வேண்டும் என்று அறிஞர் அறைகின்றனர். ஒரு சாரார் ‘இக் கொம்புகள் சாஞ்சி ஸ்தூபத்தின் வாயிலில் பொறிக்கப்பட்டுள்ள சூலத்தைப் போன்றுள்ளன. யோகியை அடுத்து விலங்குகள் இருப்பது சிவன்-பசுபதி என்பதைக் குறிக்கின்றதன்றோ? மூன்று தலைகள் நன்கு தெரிவதால், பின்புறம் இரண்டு தலைகள் இருத்தல் கூடும் என்று கூறுகின்றனர். வேறு ஒரு சாரார், ‘மூன்று தலைகளும் ஆக்கல், அளித்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைக் குறிப்பன’ என்பர். இதுபோன்ற முத்தலை உருவங்கள் ‘ஆபு’ மலைக்கருகில் அழிந்து கிடக்கும் கோயில்களிலும், வட ஆற்காடு ஜில்லாவில் காவேரிப் பாக்கத்தை அடுத்த மேலைச் சேரியிலும், பெல்காம் கோட்டத்தில் உள்ள கோகாக்’ நீர் வீழ்ச்சிக்கு அருகிலும், உதயபுரி சமஸ்தானத்தைச் சேர்ந்த ‘சித்தோர்கார்’ என்னும் இடத்திலும் காணப்பட்டன. ஆயின், இவை வரலாற்றுக் காலத்தில் வழக்காறு அற்றுப்போயின.

லிங்க வழிபாடு

பெரிய லிங்கங்களும் சிறிய லிங்கங்களும் மிகப் பலவாகக் கிடைத்துள்ளன. ஹரப்பாவில் மட்டும் 600க்கு மேற்பட்டவை கிடைத்துள்ளன. பண்டை மக்கள் சிறிய லிங்கங்களைத் தாயித்துகள் போலக் கழுத்திலோ கையிலோ கட்டியிருந்தனராதல் வேண்டும்:[6] இவையன்றி முத்திரைகளும், செம்பு வில்லைகள் போன்றனவும் அணியப்பட்டு வந்தன.

.

நந்தி வழிபாடு

சிந்துவெளி விலங்கு வணக்கத்தில் முதலிடம் பெற்றது . எருதே ஆகும். யோகிக்கு முன் திமில் பருத்த எருது நிற்பது போலவும் படுத்திருப்பது போலவும் காணப்படுகிறது. ஒரு கோவிலுக்குள் உள்ள சிறு கோவில் முன் (மூலஸ்தானத்தின் முன்) நந்தி நிற்பது ஒரு முத்திரையிற் பொறிக்கப்பட்டுள்ளது. சிந்து வெளி மக்கள் வாணிபத்திற் பேருதவி புரிந்து வந்தது எருதே ஆகும். ஆதலின், நாளடைவில் அது வணக்கத்திற்கு உரிய விலங்காக மாறிவிட்டது என்று அறிஞர் அறைகின்றனர். நந்தி வணக்கம் முதலில் தனியே இருந்து, பின்னர்ச் சிவ வணக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

தொகுத்து நோக்கின் சிந்துவெளியில் கிமு 4000  ஆண்டளவில் இற்றைக்கு 6000ஆண்டுகளிற்கு முன்னரே சைவம் செழித்து இருந்ததையும் அதன் தோற்றம் எப்போது என கணிக்கமுடியாவிட்டாலும் தற்போது உயிர்ப்புடன் உள்ள சமயங்களில் உலகின் மிகத் தொன்மையானது என துணிவதிலும் பழந்தமிழர் பின்பற்றிய கட்டமைக்கப்பட்ட முதல்  சமய நெறி என்பதில் எந்த ஐயமும் இல்லை.

No comments