IMF கடன் பெற்று புலி தேடும் இலங்கை படைகள்!

 




இலங்கை அரசு சர்வதேச நாணயத்தின் கடனினை பெற்றுவிட்டதாக தெற்கில் வெடிகொழுத்தி கொண்டாப்பட்டுக்கொண்டிருக்கையில் புலிகளது ஆதரவாளரென புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் இளைஞன் ஒருவனை தேடிவருகின்றது இலங்கை இராணுவம்.

இலங்கை இராணுவத்தின் தேடுதல் வேட்டையிலிருந்து தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்ற இலங்கை காவல்துறையில் கோரிக்கைவிடுத்துள்ளார் தந்தை.

புத்தூரை சேர்ந்த 64வயதுடைய பிள்ளையான் தர்மகுலசிங்கம் எனும் தந்தையே தனது மகனான நிலாநிதன் என்பவரை தேடி இராணுவ புலனாய்வு பிரிவினர் மிரட்டிவருவதாக காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

தனது மகனான தர்மகுலசிங்கம் நிலாநிதன் 2015ம் ஆண்டிற்கு முன்னதாக புத்தூர் பகுதியில் படையினரால் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்குதல்கள் ,கடத்தல்கள் தொடர்பில் ஊடகங்களிற்கு தகவல்களை வெளியிட்டுவந்ததாக சொல்லப்படுகின்றது.குறிப்பாக புலம்பெயர் வானொலியினில் அவரது பேட்டிகள் ஒலிபரப்புமாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களையடுத்து நாட்டை விட்டு வெளியே தப்பித்து நிலாநிதன் ஓடியுள்ளார்.

எனினும் தப்பித்து ஓடிய மகனான நிலாநிதனை கையளிக்க கோரியே அப்பகுதியிலுள்ள இராணுவபுலனாய்வு பிரிவினர் தொல்லை கொடுப்பதாக தந்தை காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனால் தனது மகன் நாட்டிற்கு மீள திரும்பவோ தனது பெற்றோரை பார்வையிடவோ முடியாதிருப்பதாகவும் தற்போது வரை இராணுவ புலனாய்வு பிரிவினர் வீடு தேடிவந்து மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வுடமராட்சி,தென்மராட்சி மற்றும் வலிகாமத்தின்  எல்லைகளாக அமைந்துள்ள புத்தூர் பகுதியில் யுத்த காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததுடன் படுகொலையும் செய்யப்பட்டிருந்தனர்.எனினும் அவர்களிற்கான நீதி இன்று வரை குடும்பங்களிற்கு கிட்டாதேயுள்ளது.

இந்நிலையிலேயே சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட உதயன் பத்திரிகையின் அலுவலகச்செய்தியாளர் செல்வராசா ரஜிவர்மனின் நெருங்கிய உறவினரான தர்மகுலசிங்கம் நிலாநிதனை தேடி இராணுவ புலனாய்வு துறை அலைவது தொடர்பில் புகாரிடப்பட்டுள்ளது.

இதனிடையே வடகிழக்கில் படைக்குறைப்பு மற்றும் இராணுவ ஆளணியினை குறைப்பதாக உறுதி மொழிகளை வழங்கியே இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தனது முதலாவது உதவித்தொகை மானியத்தை தற்போது பெற்றுள்ளது.

ஏனினும் இலங்கை அரசின் உறுதி மொழிகள் அனைத்தும் சர்வதேசத்தை ஏமாற்றவேயென தமிழ் தரப்புக்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.


No comments