தமிழ் அரசு தனியே தானாம்!

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதனிடையே கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள , தொடர்ந்தும் சேர்ந்து போட்டியிடுவதா அல்லது தாமும் தனித்தனியாகவே போட்டியிடுவதா என்பது றித்து அந்தந்தக் கட்சிகள் தமக்குள் பேசித் தீர்மானம் எடுப்பர் என்றும் முடிவாகியுள்ளது.

கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளின் கலந்துரையாடலின் போதே தமிழரசுக் கட்சி தனது இந்தத் தீர்மானத்தினை அறிவித்தது.

கலந்துரையாடலில் – கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் சார்பில் தலைவர் மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்றி மகேந்திரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் சார்பில் ஊடகவியலாளர் சிவராம் கொலையாளி நல்லநாதர் ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். உடல் நலமின்மை காரணமாக தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க முடியவில்லை.

இதன்போது – நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் – எவ்வாறாயினும் தாம் தனித்தே போட்டியிடப் போவதாகத் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துத் தெரிவித்துள்ளது.

அத்துடன் – ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரைப் பயன்படுத்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவரும் போட்டியிடுவதில்லை என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தமிழரசு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவ்வாறான் எந்த விடயமும் பேசப்படவே இல்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


No comments