எங்கள் கடல்:எங்களிடமில்லை!



யாழ்.குடா கடலின் பருத்தித் தீவுக் கடலில் சுமார் 50 ஏக்கரில் சட்டவிரோத கடல் அட்டைப் பண்ணை இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள்  தடுக்காது மீனவ சமூகங்களை தூண்டி விடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கவலை தெரிவித்தார்.

சுபீட்சமான நாட்டுக்கான பாதை நல்லிணக்கமே என்னும் தொனிப் பொருளினாலான நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கம்  ஏற்பாடு செய்த  இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் கலந்துரையாடலில் அமைப்புக்கள் சார்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 50 ஆயிரம் கடல் தொழில் குடும்பங்களின் சார்பில் 2 இலட்சம் மக்களின் பிரதிநிதியாக எமது மீனவ சமூகம் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில்  தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம் தீர்வுகள் எட்ட ப்படவில்லை.

வடக்கு கடற்பரப்பில் அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பாரம்பரியமாக பல வருடங்களாக கடற்தொழில் செய்து வருகின்ற குடும்பங்களின் வருமானங்களை பாதிக்கும் வகையில் அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

பருத்தித்தீவில் சுமார் 50 ஏக்கரில் அனுமதியற்ற அட்டைப்பண்ணை இடம்பெற்று வரும் நிலையில் அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மீனவ சமூகங்களை தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் தமக்கான அரச பணியை ஏற்கும் போது சட்டதிட்டங்களுக்கு முரணான வகையில் அரச சேவையை மேற்கொள்ள மாட்டேன் என சத்தியப் பிரமாணம் செய்து விட்டு சட்ட விரோத செயற்பாடுகளை அனுமதிப்பது தமது அரச பணிக்கு செய்யும் துரோகமாகும்.

சட்ட விரோத அட்டைப் பண்ணை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூற மறுத்து வரும் அதிகாரிகள் சில முகநூல்களில் அட்டைப் பணைக்கு ஆதரவாகக் கருத்துக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடகடல் ஆய்வு செய்யப்படாத நிலையில் மீனவ சமூகமாகிய எங்களுக்கு கடற் பரப்புத் தொடர்பில் அவ்வாறான தன்மைகள் இருக்கிறது என அறிய முடியாது உள்ளது.

அட்டைப் பண்ணைக்கு நாங்கள் எதிரானவர்களோ அல்லது அவற்றை நிறுத்துவதோ எமது நோக்கம் அல்ல.

கடல் சார்ந்த அதிகாரிகளால் மீனவ அமைப்பினருக்கு  நடாத்திய செயலமர்வில் அட்டை பண்ணைகளால் கடல் வளம் பாதிக்கும் என கூறிவிட்டு தற்போது அட்டைப் பண்ணைக்கான அனுமதியை வழங்குவது சரியானதா.

 ஆகவே அட்டைப் பண்ணையால் கடல் வளத்திற்கும் கடலுக்கும் பாதிப்பா இல்லையா என முடிந்தால்  ஊடகங்களுக்கு முன் நெஞ்சுத் துணிவிருந்தால் விஞ்ஞானப்பூர்வமான  உத்தரவாதத்தை தாருங்கள் பார்ப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments