அநுராதபுரத்தில் ஈனம்! அமெரிக்காவில் வேசம்! பனங்காட்டான்


அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேரடியாக துப்பாக்கி முனையில் கொலைப் பயமுறுத்தல் விடுத்தவர் அப்பாவியல்ல. ஏற்கனவே இரண்டு படுகொலைச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்களைப் புரிந்து அரசியல் கலப்பு நீதியால் தப்பியவர். அமெரிக்காவில் நின்று புலம்பெயர் தமிழரை பேச்சுக்கு அழைப்பு விடுத்திருப்பவர் சாதாரண பிரஜையல்ல. கொலைச் சாம்ராஜ்ஜியத்தின் தலைவர். புலம்பெயர் தமிழரை தடை செய்த இலங்கையின் முதலாம் இலக்க போர்க்குற்றவாளி.
 

மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பித்த வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வு அமெரிக்காவில் ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் - அநுராதபுரத்திலுள்ள சிறைச்சாலையில் கேவலமான, மனிதாபிமானமற்ற, அருவருக்கத்தக்க, ஈனத்தனமான சம்பவமொன்று இடம்பெற்றது. 

இந்த மாதம் 12ம் திகதி மாலை ஆறு மணியளவில் சிறைச்சாலைக்குள் போதையில் தமது சகாக்களுடன் புகுந்த லொஹான் ரத்வத்த, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, தமக்கு முன்னால் முழந்தாளிட வைத்து, அவர்கள் தலையில் தனது துப்பாக்கியை அழுத்தி கொல்லப் போவதாக எச்சரி;த்தார். 

லொஹான் ரத்வத்த சாதாரணமான ஒரு நபரல்ல. நாடாளுமன்ற உறுப்பினர், இரட்டை ராஜாங்க அமைச்சர், புகழ் பெற்ற அரசியல் குடும்பத்தின் வாரிசு. சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இவரது ராஜாங்க அமைச்சுகளில் ஒன்று. 

சிங்கள பௌத்த அரசாங்கத்தின் கட்டமைப்பில் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு என்பது தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் கொலைப் பயமுறுத்தல் விடுவது என்னும் வரைவிலக்கணத்தை இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. 

இவரது கேடுகெட்ட ஈனச்செயற்பாடு சர்வதேசமும் பகிரங்கமானதையடுத்து, சிறைச்சாலைகள் சம்பந்தப்பட்ட ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இன்னமும் மற்றைய ராஜாங்க அமைச்சராகவே பதவி வகிக்கிறார். அதனையும் ராஜினாமா செய்யுமாறு அவரை இதுவரை எவரும் பணிக்கவில்லை. 

சிறைச்சாலை ராஜாங்க அமைச்சர் பதவி விலகலை இவர் தாமாகவே எடுத்த முடிவு போலவும், அந்த முடிவை பிரதமரும் ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டதாகவுமே ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் நீதி அமைச்சர் அலி சப்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், லொஹானை பதவி விலகுமாறு தாங்கள் கூறியதாகவும் அதன் பிரகாரம் அவர் பதவி விலகியதாகவும் தெரிவித்தார். இதன் உண்மை சில காலத்துக்கு மர்மமாகவே இருக்கும். 

சிறைக்கைதிகள் புனர்வாழ்வுக்குப் பொறுப்பானவர், போதையில் தமது சகாக்களுடன் சண்டித்தனப் பாணியில் அத்துமீறி சிறைச்சாலைக்குள் புகுந்து, தமிழ் அரசியல் கைதிகளை மட்டும் அடையாளப்படுத்தி அழைத்து, தனது விருப்புக்கேற்றவாறு அடவாடித்தனமாக நடந்து கொண்டமைக்கு என்ன காரணம்? ஏன் இப்படிச் செய்தார்?

இதுபற்றி பொலிஸ் விசாரணை, சிறைச்சாலை ஆணையாளர் விசாரணை, நீதி விசாரணை என்றெல்லாம் சொல்லப்படுகிறதே தவிர எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. அமைச்சர் அலி சப்றி சிறைச்சாலைச் சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியதுகூட வெளியுலகுக்காகவே! 

ஆனால், லொஹான் ரத்வத்த சிறைச்சாலையில் தாம் அப்படி எதுவும் செய்யவில்லையென்றும், போதையில் சிறைச்சாலைக்குள் செல்ல தாம் ஒரு முட்டாள் அல்லவென்றும், எவர்மீதும் தொடக்கூடவில்லை என்றும் அறிக்கை மூலம் கூறியுள்ளார். 

கைதிகள் மீது அவர் தொடவில்லை என்று கூறுவது உண்மையாக இருக்கலாம். தமது துப்பாக்கியைத்தானே அவர்களின் தலையின்மேல் வைத்தார். அதற்கு மேல் போதையில் இருந்தவருக்கு என்ன ஞாபகம் வரும்? குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்பார்கள். 

லொஹான் ரத்வத்த யார் என்பதையும் அவரின் பின்புலத்தையும் தெரிந்து கொண்டால் மட்டுமே சிறைச்சாலையில் அவர் என்ன செய்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடியும். 

ரத்வத்த என்பது சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடும்பப் பெயர். லொஹானின் தந்தை அனுரத்த ரத்வத்த, சிறிமாவோவின் சகோதரர் முறையானவர். சிறிமாவோவின் மெய்க்காவலராகவும் இருந்த ராணுவ அதிகாரி. சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் - அவரது தாய்மாமன் என்ற ரீதியில் பாதுகாப்பு பிரதியமைச்சராக இருந்தவர். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழின அழிப்பில் களத்தில் நின்று தீவிரமாக ஈடுபட்டவர். 

2001ம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது கண்டியில் உடத்தலவின்ன என்ற இடத்தில் பத்து முஸ்லிம் இளைஞர்கள் சுட்;டுக் கொல்லப்பட நால்வர் காயமடைந்தனர். இதற்கான வழக்கில் அனுரத்த ரத்வத்தையும் அவரது புதல்வர்களான லொஹான் மற்றும் சனுக்க ஆகியோரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்கள் மீதான விசாரணை இடம்பெற்றது. 

இலங்கையின் அரசியல் கலந்த நீதித்துறை இவர்கள் மூவரையும் விடுதலை செய்தது. இவர்களுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட அனுரத்த ரத்வத்தையின் மெய்க்காவலர்களான ஐந்து ராணுவத்தினருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. 

றக்பி வீரர் ஜோயல் பெரேரா படுகொலை, கண்டி கந்தன்னை பென்குவிற் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஆகியவற்றிலும் லொஹான் ரத்வத்த நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர். எனினும், அரசியல் செல்வாக்கால் அவர் விடுதலையானார். தொடர்ச்சியாக கொலைகளில் சம்பந்தப்பட்டு இரத்தக்கறை படிந்த கரங்களின் சொந்தக்காரரான லொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலையில் என்ன செய்திருப்பார் என்பதை சிறுகுழந்தையாலும் ஊகிக்க முடியும். 

கொலைகாரர்களின் ஆட்சியில் ஒரு கொலைகாரனுக்கு யார் நீதி வழங்குவர்? இவ்விடயத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள் தலையை நிமிர்த்தி தோள்களை உயர்த்தி நடப்பதையே இலங்கையில் பார்க்க முடியும். 

இந்த வாரத்தின் முக்கிய பேசுபொருளாக இப்போது இருப்பது, அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றச் சென்ற ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச அங்கு தெரிவித்த முக்கியமான ஒரு விடயம். 

கொரோனா பேரிடரை முன்னிட்டு 193 நாடுகளின் பிரதிநிதிகளையும் நேரடியாக அமெரிக்கா வரவேண்டாம் என்றும் நேரலை வழியாக உரையாற்றுமாறும் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாத கோதபாய நேரடியாக நியுயோர்க் சென்றிருந்தார் - தமது மனைவியுடன். 

கோதபாய தம்பதியினரின் ஒரே பிள்ளையான மகன் மனோஜ் ராஜபக்ச அமெரிக்காவில் தமது மனைவியுடன் வசித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். தனது பேரனை முதன்முறையாகப் பார்ப்பதற்கு ஐ.நா. கூட்டத்தொடரை கோதபாய சாதகமாக்கிக் கொண்டார். இப்போதைக்கு இது ஒரு குறுந்தகவல் - பேரப்பிள்ளைப் பாசம் யாருக்குத்தான் இருக்காது?

ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றப் போனவர், அதற்கு முன்பாக அதன் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டரிசியுடன் உரையாற்றுகையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு விடுத்துள்ள பகிரங்க அழைப்பு பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர் விடுத்த அழைப்பே இன்றைய முக்கிய பேசுபொருள். 

ஐ.நா.வின் உப அமைப்பான மனித உரிமைகள் பேரவை கடந்த ஒரு தசாப்தமாக இலங்கையுடன் ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. போர்க்குற்ற பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை என்பவற்றுடன் சம்பந்தப்பட்டது இது. இவற்றுக்காக பல தீர்மானங்கள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் இணைஅனுசரணையுடன் 2015ல் நிறைவேற்றப்பட்ட 30:1 தீர்மானம் முக்கியமானது. 

இவை அனைத்தையும் அடியோடு மறுத்து நிராகரித்தவர் கோதபாய. இறுதியாக கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 40:1 தீர்மானத்தையும் இவரே நிராகரித்தார். 

பயங்கரவாதிகளான புலம்பெயர் தமிழர்களின் நெருக்குவாரத்தினாலேயே இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் கோதபாய கூறி வந்தார். இதனாற்போலும் ஆறு மாதங்களுக்கு முன்னர் புலம்பெயர் தமிழர் அமைப்புகளை விடுதலைப் புலிகளின் பினாமிகள் என்றும், பயங்கரவாத அமைப்புகள் என்றும் கூறி விசேட வர்த்தமானி மூலம் தடை செய்தார். 

உள்நாட்டுப் பயங்கரவாதத்தை ஒருவாறு முடித்துவிட்டோம், இனி புலம்பெயர் தமிழ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதே தமது பிரதான இலக்கு என்று பல தடவை கர்ச்சனை செய்ததோடு, முன்னாள் படைத்துறையினரை தெரிந்தெடுத்து தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு தூதுவராகவும் அனுப்பினார். 

இந்தப் பின்னணியில் நின்று பாரக்கும்போது, தற்போது புலம்பெயர் தமிழர்களையும் அவர்களின் அமைப்புகளையும் நோக்கி விடுத்திருக்கும் அழைப்பின் கபடத்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது. தயாகத்தில் வாழும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேரையும் புறக்கணித்துவிட்டு திடீரென்று புலம்பெயர் தமிழர் மீது நம்பிக்கை கொண்டு பாச அழைப்பு விடுத்திருக்கிறார். 

தம்மால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்களுடன் பேச வேண்டுமென திடீரென இவருக்கு  ஞானம் உதித்திருப்பது எதற்காக? ஒரு எறியில் பல மாங்காய்களை வீழ்த்தலாம் என நினைக்கிறாரா?

ஏதாவது ஓரிரு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இவரின் அழைப்பை ஏற்று பேச்சை நடத்தினால்,  அதனை ஒரு பொறியாக்கி சர்வதேசத்தை ஏமாற்றலாம் என்பது இவரது திட்டங்களில் ஒன்று. 

அதே பொறியை மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வில் முன்வைத்து, தமிழர் தரப்புடன் நேரடியாக பேச ஆரம்பித்துவிட்டோம் என்று கூறி மனித உரிமை பேரவையை இலகுவாக காய் வெட்டலாம் என எண்ணுவது இன்னொரு திட்டம். 

இலங்கையிலுள்ள தமிழ் தேசியத் தலைமைகளை புலம்பெயர் தமிழர்களுடன் இணங்கிச் செல்லவிடாது, இதன் வழியாக பிளவுபடுத்தி தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிர்மூலமாக்குவது மற்றொரு திட்டம். இன்னும் இன்னும் பல அவரிடம் இருக்கலாம். 

கோதபாய கூறும் உள்ளகப் பொறிமுறை என்பது - தமது நேரடி உத்தரவில் கொல்லப்பட்டவர்களையும், காணாமலாக்கப்பட்டவர்களையும் மூடி மறைத்து விசாரணைகளை ஒழித்துக் கட்ட - தமிழரை உள்ளிழுத்து அருகிருத்தி காரியமாக்கும் ஒரு தீப்பொறி. 

தமிழ் மக்கள் கேட்பது சர்வதேச நீதிப் பொறிமுறைக்கூடான குற்ற நீதி விசாரணையே! கோதபாயவின் உள்ளக பொறிமுறையை அன்று. 


No comments