சோழர்களுடைய புலியையே பிரபாகரன் ஏந்தினார்!

 

இலங்கைப் பாரதிய ஜனதாக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும் நோக்கம் இலங்கையில் உள்ள இந்துத்துவ வாதிகளுக்கு உண்டு.

நான் இதை உறுதி செய்கிறேன் என தெரிவித்துள்ளார் மறவன்புலோ சச்சிதானந்தன்.

இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரை இலங்கையில் பெயராக்கிக் கட்சி தொடங்குவது புதிய செய்தி அல்ல.

இந்தியாவின் விடுதலை இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸின் வெற்றிகரமாக செயலைப் பார்த்துக் கொழும்பில் சிங்களவரும் தமிழரும் இணைந்து உருவாக்கியது இலங்கைத் தேசிய காங்கிரஸ்.

ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில் மகாத்மா காந்தியடிகளை வரவேற்ற அமைப்பு யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ். நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றை புறக்கணிக்குமாறு அரசியல் நடத்தியதும் அதே காங்கிரஸ்.

ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வந்து மலையகத் தமிழருக்காக அமைப்பு உருவாக்கியபோது அதே காங்கிரஸ் பெயரை வைத்தார். பெயர் இலங்கை இந்திய காங்கிரஸ்.

திரு ஜிஜி பொன்னம்பலம் அவர்கள் அதே காங்கிரஸ் பெயரை வைத்து தமிழர்களுக்காகக் கட்சி தொடங்கினார். பெயர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்.

திரு. ம.. பொ. சிவஞானம் தமிழகத்தில் அமைத்த தமிழரசுக் கழகத்தின் பெயரிலேயே தமிழரசுக் கட்சியை உருவாக்கியதாக அக்காலத்திலேயே திரு எஸ் ஜே வி செல்வநாயகம் மீது குற்றம் சாற்றினர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை இலங்கையில் அமைத்தவர் கொழும்பில் வாழ்ந்த திரு மணவைத்தம்பி.

திரு எம் ஜி ராமச்சந்திரன் தமிழகத்தில் அண்ணா திமுக அமைப்பைத் தொடங்கிய உடனேயே யாழ்ப்பாணத்தில் இலங்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்தவர் கொட்டடியில் வணிகரான என் அருமை நண்பர் திரு. மதிமுகராசா. திரு எம் ஜி இராமச்சந்திரனின் தீவிர சுவைஞர். அக் கட்சியின் பெயரால் யாழ் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டவர்.

இலங்கையிலே புலிக்கொடி என்றால் சிங்களவர் நடுங்குவர் என்றும், எல்லாள சோழன் தொடக்கம் பிற்காலச் சோழர் வரை புலிக் கொடியோடு படையெடுத்து அரசுகளைக் கைப்பற்றினர் என்றும் வரலாறுகளை நாங்கள் படித்திருக்கிறோம். நாக நாட்டு அரசர்கள் வைத்திருந்த நாகக் கொடி பின் வந்த சிங்கை அரசர்கள் வைத்திருந்த நந்திக்கொடி இவையாவும்  நமக்கு கொடிகளாக இருந்தன. எனினும் சோழர்களுடைய புலியைத் தன்னுடைய கொடியில் அமைத்து கொண்டு இயக்கம் நடத்தியவர் திரு. வே பிரபாகரன்.

சேனநாயக்களுக்கோ ஹண்டி பேரின்பநாயகத்துக்கோ நடேச ஐயருக்கோ ஜீஜி பொன்னம்பலத்திற்கோ செல்வநாயகத்துக்கோ மணவைதம்பிக்கோ மதிமுகராசாவுக்கோ பிரபாகரனுக்கோ இந்தியப் பெயர்களும் சின்னங்களும் இலங்கை அரசியலை முன்னெடுக்கக் காலத்தின் கட்டாயமாக இருந்தமை வரலாறு.

மாஸ்கோவில் மழை பெய்தால் இலங்கையில் குடை பிடிப்பார்கள் என்ற நகைச்சுவைக்கு உரியவர்கள் பொதுவுடைமைக் கட்சியினர்.

கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் அறக்கட்டளைகள் பலவற்றை அமைத்தவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அந்த அறக்கட்டளைகளுக்கு இலங்கைப் பெயர்களே வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இலங்கையர் பெயர்களிலேயே விட்டுச்சென்ற சுவடுகள் ஏராளம்.

கொல்கொத்தாவின் இராமகிருஷ்ண மிஷன் 

இரிசிகேசத்தின் தெய்வீக வாழ்க்கை சங்கம்

மராத்தியின் சீரடி சாய்பாபா அமைப்பு 

புட்டபர்த்தியின் சத்ய சாய்பாபா அமைப்பு

மேல்மருவத்தூரின் அன்னை பராசக்தி அமைப்பு

கேரளத்தின் ஐயப்ப சேவா சங்கம் 

என வகைவகையாக இந்திய அமைப்புகளை ஒட்டி இலங்கையில் அமைப்புகளை நடத்தி வருகின்றனர்.  

இலங்கையில் உள்ள புத்த மரபுகள், சங்கங்கள் யாவும் இந்தியாவை அடியொற்றி அமைந்தன. முதலில் புத்தர் தந்தார்.  பின்னர் அசோகன் தந்தார். அதற்குப் பின்பு தமிழகத்தில் இருந்து புத்த கோஷர் வந்து விசுத்தி மார்க்கம் கண்டார். தாய்லாந்திலிருந்து சயாம் நிக்காய அமைத்தனர்.

இலங்கை வரலாறு ஒருவகையில் இந்தியப் பண்பாட்டு ஊடுருவலின் வரலாறே. இந்திய - அரசியல் சமூக மருத்துவ அறிவியல் சோதிட மற்றும் வாழ்வியல் கூறுகளையும் விழுமியங்களையும் படி எடுத்து அவற்றை இலங்கைச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கிய வரலாறே.

இலங்கையில் சிவசேனை அமைந்ததும் இலங்கைப் பாரதிய ஜனதா கட்சி என அரசியல் கட்சி தொடங்குவதும் 25,000 ஆண்டுகள் தொடர்ச்சியான உலக மனித விழுமியப் படியெடுப்பு வரலாற்றின் பிம்பங்களே எனவும் மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். 

No comments