20ம் திகதி தீச்சட்டி பேரணி!



எதிர்வரும் 20ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். 

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து 20ம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்நிலையில் குறித்த தினத்தன்று தீச்சட்டி போராட்டமாக முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று அழைப்பு விடுத்துள்ளனர்.


குறித்த சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி மேலும் தெரிவிக்கையில்,உண்மைக்கு நீதிக்குமான குறித்த போராட்டம் சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்காக குறித்த தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்கும்வரையும், அவர்களிற்கான நீதி கிடைக்கும் வரையிலும் குறித்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை.

வருகின்ற 20ம் திகதி வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளும் எமக்கு பலம் சேர்க்க வேண்டும். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், அரசியல் பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் அன்றைய தினம் நடைபெறவுள்ள தீச்சட்டி பேரணியில் கலந்துகொண்டு எங்களிற்கான நீதி கிடைக்க வலு சேர்க்குமாறும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இந்த தீச்சட்டி பேரணியானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலினை சென்றடையும். இந்த போராட்டமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இடம்பெறவுள்ள நிலையில் எமக்கான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும். 

எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களும், எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவரும் 20ம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பேரணியில் கலந்து கொண்டு எமக்கு வலுச் சேர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


No comments