கிளிநொச்சியில் போராட்டம்:சிறீதரனும் இணைந்தார்?


கிளிநொச்சி மாவட்ட கிறித்தவ முஸ்லிம் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில்  இன்று ஜனாஸா எரிப்பிற்கு எதிரான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொரோனா முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக வடகிழக்கில் தமிழ் முஸ்லீம் தரப்புக்கள் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உடல்களை எரிப்பதற்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.



கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் போராட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்திருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம்கள் தமது உறவுகளின் உடல்களை தமது மத நடைமுறையின் படி புதைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதற்கு அரசாங்கத்தால் இதுவரை எந்தவிதமான சாதகமான பதில்களும் கிடைக்காத நிலையில் நாடு முழுவதிலும் உடல்கள் தகனத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


No comments