சுமந்திரனை மறுதலிக்கிறார் சுரேன்?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட, ஜெனிவா குறித்த ஆவணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையதல்ல எனத் தெரிவித்திருக்கும் ரெலோவின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி, இந்த ஆவணத்தை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எவையும் பார்வையிடவும் இல்லை. அது குறித்து கலந்துரையாடப்படவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் குறிப்பிட்டவை வருமாறு:

ஜெனிவா குறித்து சி.வி.விக்னேஸ்வரனுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் சுமந்திரனால் கையளிக்கப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய ஆவணத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

அந்த ஆவணத்தை நாங்கள் பார்வையிடவும் இல்லை. அது எமக்குத் தரப்படவும் இல்லை.

அது அவர்களிடம் நேரடியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளுடன் அதனையிட்டு கலந்தாலோசனைகள் எதுவும் இடம்பெறவும் இல்லை. அதிலுள்ள விடயங்கள் என்ன என்பதும் எமக்குத் தெரியாது.

ரெலோவையும் புளொட்டையும் பொறுத்தவரை 2019 இல் இது தொடர்பில் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தோம்.

திருமலையில் 2019 மார்ச்சில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் இவ்விடயம் தொடர்பில் நாம் 6 கட்சிகள் இணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். அந்தத் தீர்மானம் எம்.கே.சிவாஜிலிங்கம் மூலமாக ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானத்தில் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையொப்பமிடவில்லை. விக்னேஸ்வரன் அதில் கையொப்பமிட்டிருந்தார்.
அதில் முக்கியமாக பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

சர்வதேசக் கண்காணிப்புப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டும்.
அதற்கு விஷேட அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அதன் முன்னேற்ற அறிக்கைகள் கிரமமாக வெளியிடப்படவேண்டும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்படவேண்டும்.
அதுவரை மனித உரிமைகள் பேரவைவை கண்காணிப்பில் இலங்கையை வைத்திருக்க வேண்டும்.
இந்த விடயங்களை உள்ளடக்கியதாகவே அந்த ஆவணம் அமைந்திருந்தது. அந்த நிலைப்பாட்டில்தான் நாம் இப்போதும் இருக்கின்றோம். அதில் மாற்றம் எதுவும் இல்லை.
சுமந்திரன் கொடுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனை அல்ல.

அதனால் கஜேந்திரகுமாரோ அல்லது விக்னேஸ்வரனோ இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனையாகக் கருதத் தேவையில்லை. இதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

தான் கையளித்தது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களால் தயாரிக்கப்பட்டது என சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டத்திலும் கூறியிருக்கின்றார்.

எமக்குத் தெரியாத நாம் சம்பந்தப்படாத எந்தவொரு யோசனையையும் நாம் (ரெலோ) ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்தார்.


No comments