அரசியல் கைதிகள் இல்லை:முருங்கையேறும் இலங்கை?


இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அரசியல் கைதிகள் எவருமே இல்லை என மீண்டும் இலங்கை அரசு முருங்கை மரமேறியுள்ளது.  குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே கைதிகள் வகைப்படுதப்படுகிறார்கள் எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


சிறைத்தண்டனை அனுபவித்து வரும் வடக்கு- கிழக்கைச் சேர்ந்த அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா? என்பது தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். 

அக்கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.


'இலங்கையில், எந்தவோர் அரசியல் கைதியும் சிறையில் தடுத்து வைக்கப்படவில்லை. தன்னுடைய அரசியல் சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தால், அவ்வாறானவர்களே 'அரசியல் கைதி' எனப்படுபவர். ஆனால், இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரம் அரசியலமைப்பின், அடிப்படை உரிமைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


ஏதாவதொரு எண்ணத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக எந்தவொரு நபரும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படவில்லை' என்றார். 

'பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டமையாலேயே நீங்கள், கூற நினைப்பவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கலாம். ( நான் நினைக்கிறேன் நீங்கள் கூறுவது அவர்களாக இருக்கலாம்.) இலங்கையில் எந்தவொரு அரசியல் கைதியும் இல்லை என்பதால், அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான எந்தவொரு விடயமும் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை' என்றார். 


'இலங்கையில் உள்ள கைதிகள், அவர்களால் செய்யப்பட்ட குற்றங்களின் கீழ் மாத்திரமே வகைப்படுத்தப்படுவர். அதனைத்தவிர, எந்தவொரு கைதியும் இனம், மொழி ரீதியாக வகைப்படுத்தப்படுவதில்லை' என்றார். 


'கைதிகளின் நன்னடத்தை தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தால், 4 வருடங்களுக்கு ஒரு தடவை, முன்வைக்கப்படும் பரிந்துரைகளை ஆராய்ந்து, கைதிகளின் தண்டனை காலத்தை அல்லது தண்டனைகள் குறைக்கப்படும். இந்தக் கொள்கையானது கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்தது' என்றார்.


 அந்த முறைமையை, மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த செயற்பாடு சகல கைதிகளுக்கும் பேதமின்றி செயற்படுத்தப்படும் எனத் தெரிவித்த அவர், அதேபோல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அன்றி, போதைப் பொருள் பயன்படுத்துபவர்களுக்கே புனர்வாழ்வு வழங்கப்படும் என்றார். 

 


No comments