2021:அரசியல் கைதிகளிற்காக விடியட்டும்?10 வருடங்களுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகளா? குற்றவாளிகளா? பயங்கரவாதிகளா? புலிகளா? என்ற விவாதங்களுக்கு அப்பால், ஒரு நாடு தன் பிரஜைகளுக்கு காட்டும் மனிதாபிமானத்தை இவர்களுக்கும் காட்ட வேண்டும் என அவர்களின் உறவினர்களும், மனிதநேயம் உள்ளவர்களும் வேண்டி நிற்கின்றனர் .

.2021 ஆம் ஆண்டின் பிறப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். 2020ஆம்  ஆண்டிற்கு விடைகொடுக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களும், அதனைத் தொடர்ந்து வரும் வருட இறுதி நிகழ்வுகளும் தொடருகின்றன. 

2019 டிசம்பரில்  முளைவிட்ட கொரோனா பெருந்தொற்று, ஏழை – பணக்காரர், உயர்ந்தவர் – தாழ்ந்தவர் – பலமுள்ளவர் – பலமற்றவர் என, இன – மத – மொழி, வர்க்க வேறுபாடுகள் இன்றி உலகை நிலைகுலையச் செய்துகொண்டிருக்கின்றது. நாடுகளுக்கு உள்ளும், வெளியிலும் அதனை எதிர்த்துப் போராடுவதில்  உலகம்  ஒருமித்துச் செல்ல முனைகிறது.

இந்தக் கொரோனா பெருந் தொற்று சிறைகளையும் விட்டு வைக்கவில்லை.  இலங்கையின்  மஹர சிறைச்சாலை அண்மையில் கொலைக்களமாகியது. கொரோனா பெருந் தொற்று பயப் பீதியினால் போராடிய கைதிகளை அடக்க துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.

இத்தகைய சூழலில்தான் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய கவலைகள் பலரையும் ஆட்கொண்டிருக்கிறது. அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை தண்டனைக்கு உள்ளான குற்றவாளிகளே சிறையிடப்பட்டுள்ளனர் என அரசாங்க தரப்பு அமைச்சர்களால் தெரிவிக்கப்படுகின்றன.

இறுதி யுத்தத்தின் முன்னரும், அதன் பின்னரும் பயங்கரவாத, அவசரகாலச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு, புலிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் அல்லது புலிகளின் தாக்குதல்களுக்கு உதவியவர்கள் என சிறையில் அடைக்கப்பட்டு, 10 வருடங்களுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகளா? குற்றவாளிகளா? பயங்கரவாதிகளா? புலிகளா? என்ற விவாதங்களுக்கு அப்பால், ஒரு நாடு தன் பிரஜைகளுக்கு காட்டும் மனிதாபிமானத்தை இவர்களுக்கும் காட்ட வேண்டும் என அவர்களின் உறவினர்களும், மனிதநேயம் உள்ளவர்களும் வேண்டி நிற்கின்றனர்.

தெற்கில் ஆயுதம் ஏந்திப் போராடிய JVPயினர் இரண்டு முறை நாட்டில் பெரும் ஆயுதக் கிளர்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களும் நாட்டின் சொத்துக்களுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தி இருந்தனர். பல்கலைக்கழக பேராசிரியர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், படையினர், காவற்துறையினர், என நாட்டின் முக்கியஸ்தர்கள் பலரையும், பொதுமக்களையும் கொலை செய்தனர்.

ஆனால் 1988 – 1989 – 1990களில் JVPயின் இரண்டாவது கிளர்ச்சியின் போது  அக்கட்சியின் தலைவர் ரோஹண விஜயவீர உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட பின்னர் ஆயுதக் கிளர்ச்சி முழுமையாக அடக்கப்பட்ட பின்னர், சிறையில் இருந்த JVPயின் முக்கிய தலைவர்கள் உறுப்பினர்கள், தலைமறைவாகி இருந்தவர்கள் என அனைவரும் மன்னிக்கப்பட்டனர்.

1971 சேகுவரா கிளர்ச்சியின் போதும் இரண்டாவது கிளர்ச்சியின் போதும் அவ்வியக்கத்தில் முக்கியமாக தொழிற்பட்டவர்களை இலங்கை அரசாங்கங்கள் மன்னித்து இருக்காவிடின், ஊடகவியலாளர்கள் – விக்டர் ஐவன், சுனந்த தேசப்பிரிய, பேராசிரியர்கள் ஜெயதேவ உயாங்கொட, நிர்மால் றஞ்சித், ஜே.வீ.பியின் தற்போதைய தலைவர்கள் ரில்வின்சில்வா, அனுரகுமார திஸ்ஸநாயக்க,  ஜினதாச கித்துலகொட – லால்காந்த,  விஜிதரணவீர – அமரசிங்க, விஜிதஹேரத், சுனில் ஹந்தும்நெத்தி, ராமலிங்கம் சந்திரசேகரன், முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர்களும்,  ஜே.வி.பியின் ஆயுதப்பிரிவு தலைவர்களில் முக்கியஸ்தர்களுமான மாலன், குமார் குணரட்னம்,  மற்றும் புபுது ஜாகொட, அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச, அவுஸ்ரேலியாவில் இருக்கும் லயனல் பொபகே, 

அச்சக உரிமையாளரும், சமூகசெயற்பாட்டாளருமான ஹெலிசேனநாயக்கா, மறைந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுனிலா,   மற்றும் தெற்கில் முன்னணி புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் இன்று உருவாகி இருக்கமாட்டார்கள்.

ஆயின் இறுதி யுத்தம் முடிந்து 12 வருடங்கள் ஆன பின்பும், விடுதலைப் புலிகள் அமைப்பும், அதன் உயர்மட்டத் தலைவர்களும், தலமையும்  முற்றாக அழிக்கப்பட்ட பின்பும், அவ்வமைப்பின் அனுதாபிகள், ஆதரவாளர்களால் இனி ஒரு ஆயுதப் போராட்டத்தை மீள ஆர்ம்பிக்கவோ, அன்றி நடத்தவோ முடியாது என்பதனை முழுமையாக புரிந்த பின்பும், 10 வருடங்களுக்கு மேல் உடலாலும், உணர்வாலும், நலிவடைந்து நொந்து நூலாகிப் போயிருக்கும் கைதிளை விடுவித்தால் அவர்களால் மீண்டும் ஒரு போராட்டம் பற்றி கனவிலும் நினைக்க முடியாது என்பதனை உணர்ந்த பின்பும், இவர்களை விடுவிப்பதில் தயக்கம் ஏன்?

ஒரு நாடு ஒரே சட்டம் – இன, மொழி, மத வேறுபாடுகளை களைந்து நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர்களே என்ற புதிய யுகத்தை ஆரம்பித்திருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ – பிரதமர் மகிந்த ராஜபக்ஸ சகோதர ஆட்சி முறையின் கீழ் அதற்கான நல்லெண்ணமாக இந்தக் கைதிகளுக்கு ஏன் பொது மன்னிப்பு அளிக்கக் கூடாது? 

 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு  அழித்து  அவர்களை விடுவித்தமை போல் இந்த தமிழ்க் கைதிகளுக்கும் ஜனாதிபதி  ஏன் பொதுமன்னிப்பு அளிக்கக் கூடாது?

ஒரு விடுதலை இயக்கம் – அல்லது ஆயுத அமைப்பு, அல்லது அரசாங்கத்தின் உலகத்தின் பார்வையில் பயங்கரவாத அமைப்பு -  தனது செயற்பாட்டுக் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, அந்த அமைப்பும், தலமையுமே கூட்டுப்பொறுப்பு. தலமையும் அமைப்பும் வழங்கிய கட்டளைகளை அதன் உறுப்பினர்கள் நிறைவேற்றி இருப்பார்கள். அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள், சட்டத்தின் ஓட்டைகளை சரியாக பயன்படுத்த முடியாதவர்கள், குற்றங்களை ஏற்றுக்கொண்டால் குறுகிய கால தண்டனைகளில் இருந்து விடுபடலாம் என சட்டத்தரணிகளால் குற்றங்களை ஏற்குமாறு கூறப்பட்டவர்கள் குறைந்தது 10 வருட தண்டனையை அனுபவித்துவிட்டார்கள்.

ஆனால்  புலிகள் அமைப்பின் கடந்தகால நடவடிக்கைகளுக்கு கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டிய  உயர் மட்டத் தலைவர்கள் பலர் மன்னிக்கப்பட்டோ, அல்லது விடுவிக்கப்ட்டோ சுதந்திரமாக வாழ்கிறார்கள். 

அது போலவே ஜே.வி.பியின் 1971 கிளர்ச்சிக் காலத்திலும், அதற்கு பிந்தைய 80களின் கிளர்ச்சிக் காலத்திலும், இடம்பெற்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் கூட்டு பொறுப்பு எடுக்கவேண்டிய   மத்திய குழுவில் அங்கம் வகித்த முக்கிய தலைவர்கள் விடுதலையாகி இன்று இலங்கையின்  முக்கிய துறைகளில் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவ்வாறே சிறையிலிருக்கும் தாமும் விடுதலையாகி  எஞ்சியகாலத்தில் தம் கனவுகளை அடையத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் அரசியற் கைதிகள். 

அவ்வாறன ஒருவர் பற்றி ஊடகவியலாளர் மயூரப்பிரியன் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றை படித்தேன். கவலை நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவே இந்தப்பதிவு.

“அரசியல் கைதியாக கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் மொறட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பட்டதாரியான பொறியியலாளர் சிவ. ஆரூரன் . B.Sc.Eng.Hons (Moratuwa) சிறைக்குள் இருந்து நாவல்களை எழுதி வருகின்றார். 

சாகித்திய விருது பெற்ற நாவல் , ஆங்கில நாவல் உட்பட நாவல்களை எழுதியுள்ளார். தற்போது துரியோதனன் துயரம் எனும் நாவலை எழுதி முடித்துள்ளார். 

ஆரூரன் , வடமராட்சியை சேர்ந்த ஆ. சிவலிங்கம் தம்பதியினருக்கு  மகனான 1980ஆம் ஆண்டு தை மாதம் 05ஆம் திகதி பிறந்தார். 

சிறுவயதிலையே நல்ல குணங்களுடனும் , சகோதரர்கள் மேல் அன்பும் பாசமும் கொண்டவர். ஆன்மீகத்தின் மீதும் பற்றுக்கொண்டவர். சிறுவயதில் கல்வியிலும் சிறந்து விளங்கினார். அப்போதே அவரது பேரனார் , அவரது தந்தையிடம் எதிர்காலத்தில் இவனொரு சிறந்த மேதையாக வருவான் என கூறியுள்ளார். 

தனது கல்வியினை ஹாட்லிக் கல்லூரியில் கற்றார். உயர்தர பரீட்சை நேரம் மலேரியா காய்ச்சலால் பீடிக்கபட்டு இருந்ததால், உயர்தர பரீட்சையில் முதற் தரம் சிறந்த சித்தியை பெற தவறியமையால் , பல்கலைக்கழக வாய்ப்பை தவறவிட்டார். 

பல்கலைகழக வாய்ப்பை பெற்றுக்கொள்ள விடாமுயற்சியுடன் , படித்து இரண்டாம் தரம் உயர்தர பரீட்சைக்கு தோற்றி மொறட்டுவ பல்கலைகழகத்தில் பொறியியல் பீடத்திற்கு தெரிவானார். 

மொறட்டுவ பல்கலைகழகத்தில் பொறியியல் சிறப்புமானி பட்டத்தினை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் வன்னியில் TRRO எனும் நிறுவனத்தில் பொறியியலாளராக சம்பளத்திற்கு பணியாற்றினார். 

பின்னர் மேல் படிப்பை தொடரும் முகமாக M.Sc கற்கையை தொடர்ந்தார். M.Sc கற்கையை தொடர்வதற்காக மொறட்டுவ , சொய்சாபுரம் பகுதியில் தங்கியிருந்த போது , 2008ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

வன்னியில் TRRO வில் பணியாற்றியமையால் தான் சந்தேகத்தில் இவரை கைது செய்திருக்கலாம் என அவரது பெற்றோர்கள் கருதுகின்றனர். M.Sc முடித்து அவுஸ்ரேலியா சென்று P.Hd , கற்று மேல் படிப்புகளை முடித்து கலாநிதி கற்கையை முடித்து கலாநிதியாக வருவார் என பெற்றோர் எதிர்பார்த்து இருக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 12  வருடங்களாக சிறையில் தன் வாழ்வை கழிக்கின்றார். 

இவரைப் போல் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மிருதங்க வித்துவான் கண்ணதாசன் யாழ் பல்கலைக்கழக ராமநாதன் நுன்கலைப்பிரிவின் விரிவுரையாளர். 90களில் கண்ணதாசன் வன்னிக்கு இடமபெயர முன்பாக 80களின் பிற்பகுதியில் எம்முடன் நெருக்கமாக இருந்தவன். சமூக  கலைச் செயற்பாடுகளில் எம்முடன் ஈடுபட்டவன். ஆனால் இடப்பெயர்வும், வன்னியின் போர்ச் சூழலும் அவனை ஊரோடு ஒத்தோட வைத்திருக்கலாம். இவன் ஒரு சிறந்த கலைஞன். படைப்பாற்றல் மிக்கவன். நுல்களையும் எழுதியிருக்கிறான். இப்படி என்கு தெரியாத அறியாத பலரும் சிறைக்குள் சிக்கியிருக்கின்றனர்.

ஜனாதிபதி அவர்களே! பிரதமர் அவர்களே! அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களே, விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களே  இவர்களை திறந்து விடுங்கள். அவர்கள் தவறுகள் செய்திருந்தால் சட்டத்தின் தண்டனையை, 10 வருடங்களுக்கு மேலாக அனுபவித்து விட்டார்கள்.

சமூகத்துடன் இணைவதற்கும், தம் கனவுகளை நிறைவேற்றுவதற்கும் ஏங்கித் தவிக்கும் இவர்களின் சிறைக் கதவுகளை திறந்துவிடுங்கள். 

தனிப்பட்ட அரசியல் சுயலாபங்களுக்காக எய்தவர்கள் இருக்க, அல்லது மடிந்து போக அம்புகளை நோகாதீர்கள்.

 இரு முறை கிளர்ச்சி செய்த ஜே.வி.பியை, புலிகளின் முன்னாள் தலைவர்கள் பலரை மன்னித்தமை போன்று, இவர்களையும் மன்னித்துவிடுங்கள். 

அவர்கள் இலங்கையின் புலமைச் சொத்துகளாகவோ, சமூகத்தின் நலன் விரும்பிகளாகவோ, நாட்டின் தேசிய உற்பத்தியின் பங்காளர்களாகவோ உருவாக இடமளியுங்கள். 

உங்கள் மனிதாபிமானத்தை, நல்லெண்ணத்தை மீண்டும் ஒரு முறை இந்த தமிழ் அரசியற் கைதிகள் மீது 

காட்டுங்கள்.  2021 அவர்களின் விடியலாக மலரட்டும்

No comments