கிழக்கில் வைத்தியசாலைகளினில் கொரோனா பிரிவு?


கிழக்கில் நான்கு வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன் தெரித்துள்ளார்.


மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அவர் கூறுகையில், “நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையால் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலை வசதிகள் அதிகமாக தேவைப்படுகின்றன.


இதற்கமைய, நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகள் பலவற்றை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவுசெய்து வைத்தியசாலைகளைத் தெரிவு செய்துள்ளது.


இதனடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.


இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் மேலும் பல வைத்தியசாலைகளை இவ்வாறு கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றியமைக்க சுகாதார அமைச்சு முடிவுசெய்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

No comments