வெளியானது மணிக்கு அனுப்பிய கடிதம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அனைத்து தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்தும், ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்தும்

நீக்கப்பட்டுள்ளதாக வி.மணிவண்ணனிற்கு கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது. கட்சியின் செயலாளரிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவித்தல் மின்னஞ்சல் வழியாக மணிவண்ணனிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது 

அது தொடர்பான கடிதம்  தற்போது எமக்கு  கிடைத்துள்ளது 

இதே வேளை மணிவண்ணன் விவகாரம் உட்கட்சி விவகாரம். இதில் வெளியாட்கள் தலையிட நாம் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இன்று தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது, இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மணிவண்ணன் விவகாரம் உட்கட்சி விவகாரம். இதில் வெளியாட்கள் தலையிட நாம் அனுமதிக்க மாட்டோம்.

இது குறித்து பலவிதமாக பேசப்படுகிறது. தேர்தல், பதவிநிலைப் போட்டியென சொல்கிறார்கள். இது எதுவுமே இந்த விடயத்தில் சம்பந்தப்படவில்லை.

25 பேரைக்கொண்ட மத்தியகுழு கூடி இது குறித்து ஆராய்ந்து முடிவெடுத்துள்ளது. அந்த முடிவை மணிவண்ணனிற்கு அனுப்பி விட்டோம். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது தனக்கு கிடைத்ததென மணவண்ணன் உறுதிப்படுத்தினார். ஆனால் அதில் கையொப்பமில்லையென்றார். தலைவர், செயலாளரின் கையொப்பத்துடன் பதிவுத்தபாலில், மத்தியகுழுவின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிவண்ணனின் பதிலை மத்தியகுழு எதிர்பார்க்கிறது. அது கிடைத்த பின்னர், மணிவண்ணன் விவகாரம் கட்சி உறுப்பினர்களிற்கு பகிரங்கப்படுத்தப்படும். இப்போதைக்கு மணிவண்ணன் விவகாரத்தில் எதையும் பேச முடியாது என்றார்.

கடித்தத்தின் முழு வடிவம் வருமாறு:-

திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன்
ஐயனார் கோவிலடி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவி நீக்கம் தொடர்பானது

தமிழ்த் துசிய மக்கள் முன்னணி என்னும் எமது அரசியல் இயக்கத்தில் தாங்கள் வகித்து வந்த தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் ஆகிய பதவிகள் 13.08.2020 ஆம் திகதிய மத்திய குழுவின் ஏகமனதான தீர்மானத்துக்கமைய உடனடியா செயற்படும் வண்ணம் குறித்த பதவிகளிலிருந்து தாங்கள் நீக்கப்படுகின்றீர்கள் என்ப அறியத்தருகின்றோம்.

அத்துடன் - பின்வரும் காரணங்களுக்காக மத்திய குழுவால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதையும் அறியத் தருகின்றோம்.

1. எமது அரசியல் இயக்கத்தின் கொள்கை சார் அணுகுமுறைகளை தாங்களும் இணைந்து தீர்மானித்த நிலையிலும், அதனைத் தொடர்ச்சியாக சவாலுக்கு உட்படுத்தி வந்தமை.

2. இதன் அடிப்படையில் - 18.04.2019 ஆம் தியதியன்று உறுப்பினர்கள் முன்னிலையில் எமது அரசியல் இயக்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பாகவும், இயக்கத்தின் கொள்கைக்கெதிராக தாங்கள் மேற்கொண்ட பரப்புரைகள் தொடர்பாகவும் தாங்கள் தவறை ஏற்றுக்கொண்டு, எமது அரசியல் இயக்கத்தின் கட்டுக்கோப்பை பாதுகாக்கும் நிலைப்பாடாக தங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாங்களாகவே கேட்டிருந்தீர்கள்.

3. குறித்த சந்திப்பின் போது - தாங்கள் ஏற்றுக்கொண்ட தவறை எமது அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக தெரிவித்து இயக்கத்தின் ஒழுக்கத்தையும், கொள்கை நிலைப்பாடுகளையும் வலுப்படுத்துமாறு தலைவரால் தெரிவிக்கப்பட்டிருந்து நிலையிலும், அதனை தாங்கள் ஏற்றுக்கொண்டிருந்த நிலையிலும், இதுவரை அதற்கான செயற்பாடுகளை தாங்கள் மேற்கொள்ளத் தவறியமை.

4. மத்திய குழு தீர்மானத்தின் அடிப்படையில் - எமது அரசியல் இயக்கத்துக்கு விரோதமாக செயற்படும் திரு.கொட்வின் தினே்ஸ் போன்றவர்களிடமிருந்து - வரப்பிரசாதங்களைப் பெறமுடியாது என மத்திய குழுவால்  தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையிலும், அவரிடமிருந்து பண உதவியினைப் பெற்றிருந்தீர்கள்.

5. அவ்வாறு பெற்றிருந்த வரபிரசாதங்கள் தொடர்பாக - தலைமைக்கு தெரிவித்த நிலையில் - அப் பணத்தினை மீளளிப்பு செய்யும் நடைமுறைப்படுத்தாது தலைமையினதும், மத்திய குழுவினதும் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டமை.

6. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் எமது அரசியல் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் என்னும் பதவி நிலையினை வைத்து - அரசியல் இயக்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராகவும், கொள்கை நிலைப்பாடுகளுக்கு எதிராகவும், உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் செயற்படத் தூண்டியமையும், கட்டுப்படுத்தாமையும் குழுவாதங்களை உருவாக்கி அரசியல் அரசியல் இயக்கத்தின் ஒற்றுமையைக் குலைக்க முயன்றமையும்.

மத்திய குழுவின் ஆணையின் பிரகாரம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்             
தலைவர்                                                               

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

 


No comments