ஞா.ரேணுகாசன் எழுதிய ''சம்பூர் பெருநிலப்பரப்பில் வழிந்தோடிய குருதி (7.7.1990)''

இலங்கை சுதந்திரம் எனும் மாயவலையில் மகிழ்ந்த போது, வீழ்ந்தது என்னவோ தமிழரின் உரிமையின் மீது சிங்கள கோடரிகளின் ஆழமான வெட்டுக்களே ஆகும். அரச இயந்திரம் தன் இனப்படுகொலையின் கோரபற்களை நன்கே கூர்மையாக்கி இரத்தம் கேட்டு அப்பாவித் தமிழினத்தை வேட்டையாட தொடங்கின. அந்த இயந்திரம் இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக பிரகடணப்படுத்தும் அனைத்து திட்டங்களையும் செவ்வனே தீட்டி, அதன் நகல்களை இனவெறிக்கு தூபமிட்டன. அதன் தொடர்ச்சியாக கல்வியில் விகிதாசார பாகுபாடு முளையெடுத்து, தமிழரின் மூளைசாலிகளை திட்டம்போட்டு முழுமையாக அழிக்கும் நோக்கோடு களமிறங்கி செயற்பட்டது.

வடகிழக்கு தாயக மண்ணின் விலைமதிப்பற்ற பல பல புத்திசாலிகள் களவாடப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர். பலரது தற்சார்பு பொருண்மியமும் தீக்கிரையாக்கப்பட்டன. இவை எல்லாம் தற்செயலாக நடந்தேறிய ஒன்றல்ல, மாறாக அரச இயந்திரத்தின் மூளையை கசக்கி பிழிந்தெடுத்த இனவாத புத்தியின் வெளிப்பாடே எனலாம். அத்தோடு சர்வதேச புத்தியின் கீழ்த்தரமான செயற் திட்டமும் இதன் பின்னணியில் முன்னணியாக இருந்தது.

சர்வதேசம் ஒருபோதும் தமிழர்களையோ அல்லது உரிமைக்காக போராடும் இனத்தையோ பாதுகாக்கும் உயரிய நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால் அந்த இனங்களை எவ்வாறு பலவீனப்படுத்தலாம் என்ற கருத்துக்களை அந்தந்த அரசுகளுக்கு அள்ளிவழங்கிக் கொண்டிருந்தன. ஈழத்தில் போராட்டம் அரும்பத் தொடங்கிய காலங்களில் தமிழ் பேசும் மக்கள் யாவரும் ஒருமித்த நோக்கோடு இப்போராட்டத்தை ஆதரித்தனர். அதனால் பெரும் பலமிக்க தமிழரை அடக்க முடியாமல் திணறிய அரசுக்கு இஸ்ரேலிய மொசாட் எனும் உளவு அமைப்பு பல உதவிகளை செய்தன.

போராட்ட ஆரம்பித்த காலங்களில் தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து ஒரே இலக்கை நோக்கி பயணித்தனர். இதன் ஆழத்தை புரிந்த அரச இயந்திரம் சில பல சூழ்ச்சிகளை சர்வதேச சக்தியின் உதவிகளை இறக்குமதி செய்து, அதன் வெளிப்பாடாக பிரித்தாளும் சூட்சுமத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி மதத்தால் வேறுபட்ட ஒரு குழுவை பிரித்தெடுத்து தனக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றியும் கண்டது. அந்த குழு தமிழினத்திற்கு மிகப் பெரும் ஆபத்துக்களை அரச இயந்திரத்தின் அனுசரணையோடு முழுமையாக செய்யத் தொடங்கியது.

அரச இயந்திரத்தில் ஒரு ஒட்டுண்ணி தாவரமாக தம்மை வலுப்படுத்திக் கொண்டு ஆதித்தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்கும் அனைத்து செய்பாட்டையும் முன்னின்று நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவே வடகிழக்கு மாகாணங்களில் பாரிய இனப்படுகொலையை செய்ய அந்த ஒட்டுண்ணி குழுக்கள் முழுமூச்சாக செயற்பட்டனர். இன்னும் பாரதூரமாக கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற அனைத்து படுகொலைக்கும் அந்த ஒட்டுண்ணிக் குழுக்களே காரணமாக அமைந்தன.

சம்பூர் கிராம பின்னணி

சம்பூர் கிராம பின்னணியை நோக்குமிடத்து நால்வகை நிலம் நன்கே செழிக்கப் பெற்ற பூமி. அத்தோடு வயலும்- குளமும் - காடும் - கடலும் - மலையும் என்றும் குறையாத வளத்தை அம்மக்களுக்கு அள்ளிக் கொடுத்திருந்தது. இந்த வளம் சிறப்பாக போராட்ட இளைஞர்களுக்கு ஒரு ஊக்கசக்தியாகவே இருந்தது. அதன் தொடர்ச்சிநாகவே பல பயிற்சி பாசறைகளை கொண்ட வீரமிகு நிலமாக இம்மண், அரச இயந்திரத்தால் மட்டுமின்றி சர்வதேச பார்வையிலும் இந்நிலம் பார்க்கப்பட்டது. இன்னும் சிறப்பாக திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்பு நிலமாகவும் இந்த சம்பூர் மண் இன்றும் காணப்படுகின்றது.

பல கிராமங்களின் தாய்க்கிராமாக திகழும் சம்பூர், இன்றோ பல இன்னல்களை சுமந்த வண்ணம் கிடக்கின்றது. நாலாங்கட்ட ஈழப் போரினை எதிர்கொண்ட சம்பூர் மண், இன்னமும் விடிவை பெறவில்லை என்பதே மறைமுகமான பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது. எந்த சிக்கலையும் தாங்கி மக்களை காத்த மண்ணை சர்வதேச சக்திகள் சூறையாடி கொண்டாட காத்திருக்கின்றது என்பதை மறைத்து அரசியியல் நடத்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ராசதந்திர இழிவான செயல்களில் இதுவும் ஒன்றாகும்.

சம்பூர் பெருநிலப்பரப்பு தமிழர்களை தன்னகத்தே கொண்ட நிலமாகும். இம்மண்ணைப் பலிகொடுத்து தம் அரசியியல் இலாபத்தை அனுபவிக்க துடிக்கின்றனர் இந்த தமிழ் அரசியியல்வாதிகள். இவர்களிடமிருந்து இம்மண்ணை காக்க வேண்டிய பெரும் கடப்பாடு மக்களினதும் சமூக அக்கறை கொண்டவர்களினதும் பலத்திலே உள்ளது.

சம்பூர் பெருநிலப்பரப்பு படுகொலை

1983 ஆம் ஆண்டுகளின் பின்னர் வெடித்த இனக்கலவரத்தை தொடர்ந்து, பல்வேறுபட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் சம்பூரை நோக்கி இடம்பெயர்ந்து தமது பாதுகாப்பை உறுதி செய்யும் நிலமாக சம்பூரை நாடி வந்தனர். வந்த மக்கள் காடுகள், குளங்கள் மற்றும் வயல்களை அண்டி குடிசை கட்டி மகிவுற்று வாழத்தொடங்கினர்.

சொந்த நிலத்தை விட்டு பிரிந்திருந்தாலும் தாய்நிலத்தில் மகிழ்வோடு வாழ்ந்தார்கள். இருப்பினும் அவ்வப்போது அரச இயந்திரத்தின் பயங்கரவாத செயற்பாடுகள் ஆங்காங்கே பல இன்னல்களை தந்தாலும் அவற்றை சகித்து வாழும் பக்குவத்தை கொண்டிருந்தனர். சிலவேளைகளில் கடலில் இருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதலிலும் சேதங்கள் ஏற்பட்ட போதிலும் தமிழர் தேசத்தில் சுதந்திரமாக வாழும் இன்பத்தில், அரச பயங்கரவாதம் இம்மக்களை எளிதில் பயங்கொள்ள வைக்கவில்லை எனலாம்.

தற்சார்பு பொருளாதாரத்தை தாமே மேற்கொண்டமையினால் அரச கட்டுப்பாட்டு பகுதியில் சென்று வரும் தேவை இம்மக்களுக்கு இருக்கவில்லை. இவ்வாறாக மக்களும் போராளிகளும் ஒன்றாக வாழ்ந்த நிலமாக இம்மண் செழிப்புற்றிருந்த காலத்தில் மூதூர் எனும் சிறிய நகரை கைப்பற்ற வேண்டி தேவை தமிழினப் போராளிகளிக்கு ஏற்பட்டது. ஆதலால் அந்த அதிரடி முயற்ச்சியை மேற்கொண்டு மூதூர் நிலத்தை இலகுவாக பிடித்து தமது நிருவாக சேவையை விரிவுபடுத்தத் தொடங்கினர்.

இந்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சியுற்ற அரச இயந்திரம் மூதூரை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அதிலும் படுதோல்வியை தழுவிய கரணியத்தால், பாரிய படையெடுப்பை சம்பூர் பெருநிலப்பரப்பின் மீது நிகழ்த்தும் நோக்கோடு முப்படை துணை கொண்டு அந்த கோர முகங்கொண்ட அரச இயந்திரம் நகரத் தொடங்கியது. அதன் பாதையில் கண்ட பிஞ்சி - பூ - காய் - கனி என்ற பேதமின்றி யாவற்றையும் வேட்டையாடி தன் இனவெறியை தீர்த்துக் கொண்டே முன்னேறியது.

அரச இயந்திரத்தின் படையெடுப்பை பல முறை எதிர்கொண்ட நிலமாக இந்நிலம் காணப்பட்டாலும், அவை ஒரு நாள் அல்லது சிலமணி நேரங்களிலும் முடிவுற்றிடும். ஆனால் இந்தப் படைநகர்வோ மூன்று நாளை கொண்டதாக அமைந்தது. பொதுவாக இச்செயற்பாடு சொத்துக்களை சூறையாடல், தீயிடலோடு முடிவுற்றிடும். ஆனால் எந்த உயிர்ச்சேதமும் நிகழ்வதில்லை. இருந்தும் இம்முறை ஏற்பட்ட படையெடுப்பு நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களின் உயிர்களை பலியெடுத்தது.

அரச இயந்திரத்தின் நகர்வு ஏற்படப் போகிறது எனும் தகவல் செவிவழி புகும் முன்னே சம்பூர் பிரதேச ஆண்கள் மற்றும் இளைஞர்கள் யாவரும் காடுகளில் தஞ்சம் புகுவர். பெண்களும் முதியோரும் குழந்தைகளும் கோயில் மற்றும் பாடசாலையில் ஒன்றாக கூடி பயத்தின் ஆதிக்கத்தில் குழுமியிருப்பர். அவ்வாறா இந்த நாளும் மக்கள் செயற்பட்டனர். ஆனால் அந்நிகழ்வு என்றும் ஆறாத வலியை தந்து செல்லுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

உண்மையில் காடுகளில் மறைந்திருந்தவர்கள் பாதுகாப்பாக வருவார்கள் என ஊர் மக்கள் அனைவரும் காத்துக் கிடந்தனர். ஒரு நாள் இரு நாளல்ல மூன்று நாளாக நடந்த அந்த கொடூர நாளில் பல பல துயரங்கள் நடந்தேறின. தனிமையில் அகப்பட்ட பெண்கள் வண்புணர்வு செய்யப்பட்டனர். தனித்தனியே கைது செய்யப்பட்ட ஆண்கள் கழுத்தறுத்து கிணற்றில் வீசப்பட்டனர். அத்தோடு முகமூடி அணிந்த காட்டிக் கொடுப்போராலும் பலர் களவாடப்பட்டனர். இவை யாவும் ரகசியமான முறையில் நடந்தேறின.

குளங்களின் நாக்கும் வறண்டு போய்க் கிடந்தன. காடுகளும் பசுமை ஆடை களைந்தே வண்ணமிழந்தன. இயற்கை அன்னையினால் தன்னிடம் தஞ்சம் புகுந்த அம்மக்களை காக்க முடியாமல் போக, காடுகளில் புகுந்த அரச பயங்கரவாதிகள் அப்பாவி தமிழர்களை வேட்டையாடி மகிழ்ச்சியில் காட்டை கடந்து, ஊரை அழித்து சில நல்லமனிதர்களை கைது செய்து மூன்று நாளில் பெரும் துயரைக் கொடுத்துவிட்டு சென்றது.

சம்பூர் பெருநிலப்பரப்பில் படுகொலையான அப்பாவிகள்

இப்பெருநிலப்பரப்பு அறுபதிற்கும் மேற்பட்ட குளங்களும் அதனோடு வயல்களும் காடுகளையும் கொண்ட நிலமாகும். இந்த நிலத்தில் காடுகளே இம்மக்களின் மிகப்பெரிய காப்பரணீகும். இக்காடுகளில் தம் உயிரைக் காப்பதற்காக மறைந்திருந்த ஆசிரியர்கள், மாணவர்கள், கோயில் பூசகர் மற்றும் அப்பாவி தமிழர்கள் போன்றோர் படுகொலை செய்யப்பட்டனர். அத்தோடு பாடசாலை அதிபர், தமிழாசிரியரின் மனைவி மற்றும் பல தமிழர்களும் கைது செய்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

படுகொலையின் போது கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய ஒருசிலர் காப்பாற்றப்பட்டனர். அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஒருசிலரது விபரங்களாக
இராசேந்திரம் பத்மநாதன் ( உயர் தர மாணவன்), பொன்னம்பலம் சச்சிதானந்தகுரு(தரம் 7 மாணவன்), புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி ( அதிபர்), மயில்வாகனம் பிரேமாநந்தராஜா( உயர்தர மாணவன்), கோணலிங்கம் சோமேஸ்வரன் (தரம் 7 மாணவன்), கனகசிங்கம் நித்தியசீலன் ( தரம் 7 மாணவன்), ச.கனகசிங்கம், கனககசூரியம் சண்முகராஜா - ரவி (தரம் 10 மாணவன்), ஒப்பிலாமணி இந்திரன், முத்துக்குமார் விஜயகாந்தன் (தரம் 10 மாணவன்), முத்துக்குமார் விஐயநாதன், வைரமுத்து வெற்றிவேல், சங்கரலிங்கம் உதயமோகன், தங்கராஜா தவராசா( பப்பாசி), பேச்சிமுத்து அருமைப்பிள்ளை (பொலிஸ் உத்தியோகத்தர்), சொக்கன் போன்றோரும்.

திருமதி கணபதி, காளிகோவில் பூசகர் (மட்டக்களப்பை சேர்ந்தவர்), இராசேந்திரம் கிராம சபை தலைவர் (கூனித்தீவு), இராசேந்திரம் வாமதேவன் ( தரம் 10 மாணவன்), வேலுப்பிள்ளை வைரமுத்து (கடற்கரைச்சேனை), வைரமுத்து அளகம்மா (கடற்கரைச்சேனை), அல்லிராசா( சூடைக்குடா), அல்லிராசா மகன் 1( சூடைக்குடா), அல்லிராசா மகன் 2 ( சூடைக்குடா), சுப்பிரமணியம் விநாயகநேசன்(கூனித்தீவு), கணபதிப்பிள்ளை செல்வராஜா (ஓய்வு பெற்ற பொலிஸ் கூனித்தீவு), வைரமுத்து சுப்பிரமணியம் (கூனித்தீவு), பேச்சிமுத்து (கிராம வைத்தியர்),வீ.அரசமணி, இ.ரவிநேசன், இ.சிவனேசன், சி.சிங்கராசா, சி.கோணலிங்கம், இ.யெகதீஸ்வரன் கணபதி கான சரஸ்வதி, சி.கவிரூபன், கோ.நரவரெத்தின, ந அருனாசலம், க.யோகநாதன் போன்றோரும் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் பலரது தகவல் கிடைக்காமை, மனவேதனை தரும் விடயமாகும்.

இந்தப் படுகொலையின் நேரடி சாட்சியங்கள்

காடுகளில் கைது செய்யப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் கத்தியால் வெட்டியும் துப்பாக்கியால் தாக்கியும் பலர் இறந்த போதும் ஒருசிலர் தப்பித்தனர். அவர்களுள் தம்பையா சுபாகரன் என்னும் மாணவனும் ஒருவராவார். இவரின் மனதில் இந்தப்படுகொலையின் என்றும் ஆறாதவலி இன்றும் பெரும் மனவுளச்சலை கொடுத்தவண்ணமே உள்ளன.

இவர் அந்த கொலைக்களத்தில் நின்ற நேரம் அங்கு நடந்த படுகொலைகளைப் பாத்தும், அவர்கள் பட்ட வேதனை ஓலத்தை கேட்டும், இரத்தம் வழிந்தோடியதை கண்டதும் மயங்கி வீழ்ந்துவிட்டார். இவரின் மீது படுகொலையான அவரது உறவினர்களின் இரத்தமும் சதையும் வீழ்ந்து கிடந்ததை கண்ட அரச மற்றும் அரசோடு சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்களான தமிழில் பேசும் தீவிரவாதிகளும் இவரும் இறந்துவிட்டார் என்ற நினைப்பில் விட்டுச்சென்றனர். அதன் பின்பு காடுகளில் புகுந்த மக்கள் உயிரற்ற உடல்களையும் உயிருக்கு போராடிய சிலரையும் இவரையும் காப்பாற்றனர். அன்றிலிருந்து இவரின் மனநிலை பெரிதும் பாதிப்படைந்த நிலையிலே காணப்பட்டார்.

படுகொலையை நினைந்து அஞ்சலித்தல்

இந்த படுகொலையை நினைவுகூர்வதற்கு பல தடைகள் காணப்பட்டன. அதாவது அரச இயந்திரத்தின் பெரும் பங்கு இதில் உள்ளபோதும் அவர்களோடு சேர்ந்தியங்கிய தமிழ் பேசும் தீவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம் இப்படுகொலையில் இருந்தமையினால், இந்த துயரத்தை நினைவு கூர்வதற்கு பல பல இன்னல்கள் எழுந்தன.

இருந்தும் இந்த வலிமிகு சம்பவத்தை எப்படியாயினும் நினைவு கூறவேண்டும் என்ற ஆற்றுப்படுத்தல் நோக்கோடு தம்பையா சுபாகரனின் தலமையில் 2018இல் சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இந்த புனித நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு, அப்படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களை அழைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பலரும் வருகை தந்து தமது இரங்கலை தெரிவித்தனர். தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர் துரைரெட்ணசிங்கம் என்பவரும் இதில் கலந்து கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

நினைவுக்கல் நடுதல்

சம்பூர் பெருநிலப்பரப்பில் நிகழ்ந்த இந்தக் கொடூரமான படுகொலையை இனிவரும் காலங்களில் நினைந்து வழிபடுவதற்காக ஒரு நடுகல்லும் தம்பையா சுபாகரன் என்பவரது தலமையில் ஒழுங்குசெய்யப்பட்டு, அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் விளக்கேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இருபத்தேழு வருடத்தின் பின் இடம்பெற்ற நிகழ்வு அரச புலனாய்வாளர்களால் அலசி ஆராயப்பட்டு, அந்த நிகழ்வை நடத்திய பலர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகினர். அதில் தம்பையா சுபாகரன் அரச இயந்திரத்தால் தேடப்படும் நபராக துரத்தப்பட்டார். அதன்பின் அவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர் தேசமொன்றில் தஞ்சம் புகுந்து வாழும் ஒரு துப்பாக்கிய நிலையில் இருக்கின்றார்.

இப்படுகொலைக்கான அஞ்சலியானது பொதுவெளியில் ஒரே ஒரு முறை மட்டும் தம்பையா சுபாகரன் என்பரால் நடத்தப்பட்டது. அதன் பின்னர் இன்றுவரை யாராலும் நடத்த முடியாத அளவிற்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றது. பொதுமக்களின் படுகொலையை நினைவுகூறுவதை ஐநா சபையும் வலியுறுத்தியுள்ள போதும், சம்பூர் மண்ணில் மட்டும் இந்நிகழ்வுக்கு தடை விதிப்பது பெரும் துயரமாகும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு

ஈழத்தில் நடந்த எந்தப் படுகொலைக்கும் இந்த அரசியியல் கட்சி இதுவரை எவ்வித நீதியையும் கேட்டு நீதிமன்றம் சென்றதில்லை. இனிமேலும் செல்லப்போவதுமில்லை. அவர்கள் தமது வாழ்வை ஆடம்பரமானதாக வாழ்வதற்கே அரசியியலைப் பயன்படுத்துகின்றார்களே அன்றி, தமிழர்களின் துயரங்களை துடைப்பதற்கான எந்த நிகழ்ச்சி நிரலையும் கொண்டிருப்பதாக இன்றுவரை அறிய முடியவில்லை.

இந்தப் படுகொலையை நினைவுகூர்ந்து வழிபடுவது தேசவிரோத குற்றமா..? இதற்கு தகுந்த தீர்வு கிடைக்காதா..? என்ற விடையில்லா வினாக்களோடு, அம்மக்களின் கண்ணீர் கரைந்து காற்றில் கலந்தது. இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தி அம்மக்களின் மனங்களில் உறைந்து கிடக்கின்ற ஆறாத துன்பத்தை அகற்றிட பொதுவெளியில் அஞ்சலி செய்கின்ற ஒரு பாக்கியத்தை யாராவது செய்து கொடுப்பதே இந்நாளில் படுகொலையான புனித ஆன்மாக்களுக்கும், அவ்வான்மாக்களின் உறவினருக்கும் செய்கின்ற உளமார்ந்த செயலாகும்.

No comments