புலிகள் மீது தடை வேண்டாம்:இலங்கையில் கோரிக்கை!


தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாடுகளும் நீக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.


யாழ்.தேர்தல் தொகுதியில் சுயேட்சைக் குழு 14 இல் போட்டியிடும் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையானது யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தது. அச் சந்திப்பின் போதே பேரவையின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்காகப் போராடிய காலத்தில் இலங்கை அரசாங்கத்தாலும் சர்வதேச நாடுகளாலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் ஐனநாயக நீரோட்டத்தில் இணைந்து ஐனநாயக ரீதியான தேர்தல்களில் களமிறங்கியிருக்கின்றனர்.

ஆகவே ஐனநாயக ரீதியான செயற்பாடுகளை சிரமங்கள் இன்றி மேற்கொள்வதற்கு புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட வேண்டியிருக்கின்றது. ஆகையினரால் இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாடுகளும் அந்தத் தடையை நீக்க வேண்டுமெனக் கேட்டுக்  கொள்கிறோம்.

மேலும் புலிகளை வைத்து இன்றைக்கு பலரும் தமது அரசியலை முன்னெடுக்கின்றனர். அதாவது தமது அரசிய் தேவைகளுக்காகவே அதனைப் பயன்படுத்த முனைகின்றனர். ஆனால் அவர்கள் புலி நீக்க மற்றும் தமிழ்த் தேசிய நீக்க அரசியலையே முன்னெடுக்கின்றனர்.

அதே போன்று எம்மை சாத்தான்கள் என்ற பாணியில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கின்றார். அது மாத்திரமல்லாது அவர்கள் தற்போது புதுக்கதைகளையும் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களது அண்மைய செயற்பாடுகள் அவர்களின் போலி முகத்திரைகளைக் கிழித்து தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே இவ்வாறான போலி தேசிய வாதிகளை இனியும் தமிழ் மக்கள் நம்பி ஏமாறக் கூடாது. உங்களது பாதுகாப்பிற்கும் உயிருக்கும் பாதுகாப்பாக அர்ப்பணித்துச் செயற்பட்ட நாங்கள் மீண்டும் உங்கள் முன் வந்திருக்கின்ற போது எங்களுக்கான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

No comments