குடாரப்பு தாக்குதலின் நாயகன் எங்கள் பிரிகேடியர் பால்ராஜ்!

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப்
பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான்; பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர்.

பிரிகேடியர் பால்ராஜ் – கந்தையா பாலசேகரன்தமிழீழம்
( கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு )வீரப்பிறப்பு : 27/11/1965வீர மரணம் : 20/05/2008ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர்.

வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன் நீண்டகாலமாக பயணித்த அந்த நாட்களின் நினைவுகள் என்றைக்குமே அழியாதவை. ஒவ்வொரு கணமும் வந்து போகும் அவரைப்பற்றிய நினைவுகள், தொடர் துன்பங்களால் துவண்டுபோன உணர்வுகளின் அடிநாளத்தை உரசிச் செல்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய கரையோரக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான் வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை எமக்குக் கொடுத்தது. ஒருபக்கம் பெருங்கடல் மற்றைய பக்கம் சிறுகடல் சூழ்ந்திருக்க, வயல் வெளிகள் தென்னைத்தோப்புகள் அதனைத் தொடர்ந்து காடு என அழகான அமைதியான அந்தக் கிராமத்தில் கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ம் திகதி (தமிழீழ மாவீரர் தினம் கொண்டாடும் நாள்) பிறந்த இவர் ஆரம்பகல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் புல்மோட்டையிலும் படித்தார்.

அவரது வாழ்வியல் சூழல் இளவயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதி காடுகள், பிரதேசங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார்.வேட்டையாடுவதற்கு தேவையான அடிப்படை விடயங்களான அவதானிப்பு, கடுமையான முயற்சி, கடினங்களை தாங்கும் தன்மை, அலைந்து திரிதல், மிருகங்களின் தன்மைகளுக்கேற்ப தந்திரோபாய ரீதியல் வேட்டையாடல், பொறுமை, மிருகங்களின் தடையங்களை பின்தொடர்ந்து செல்லுதல் போன்ற பண்புகள் சிறுவயது முதல் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன.



அது மட்டுமல்லாமல் வேட்டைக்கு சென்றால் ஒருபோதும் வேட்டையில்லாமல் திரும்பமாட்டார் என்னுமளவிற்கு ஓர்மம் மிக்க குணாதியசம் கொண்டவர்.இவர் பிறந்து வளர்ந்த மணலாறு என அழைக்கப்படும் சிலோன் தியட்டர், மண்கிண்டிமலை முந்திரைக்குளம், கென்பாம், டொலர்பாம் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற தொழில் வாய்ப்புள்ள, வளம் மிக்க விளைநிலங்களை கொண்ட பகுதிகளில் இருந்த தமிழ்மக்களை விரட்டியடித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்குடன் இலங்கை அரசானது செயற்பட்டது. இதனால் அவரது குடும்பம் உட்பட அங்கு வாழ்ந்த மக்களும் அவரது உறவினர்கள் பலரும் வாழ்விடங்கள் சொத்துக்களை இழந்து ஓரிரவில் அகதிகளாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக ஆயுதப் போராட்டத்தினுடாகவே எமது பிரதேசங்களை பாதுகாக்க முடியும் என்று முடிவெடுத்தார்.

 இவரது போக்கை உணர்ந்த தந்தையார் “நீ போராட தீர்மானித்தால் பிரபாகரன் இயக்கத்தில் இணைந்து போராடு, அந்த இயக்கம் தான் சரியான வழியில் போராடும்” என சொல்லி வழிகாட்டியதை பால்ராஜ் அவர்கள் நினைவுகூருவார்.அவர் 1983ம் ஆண்டு விடுதலைப் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டார். கொக்குத் தொடுவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு மணலாறு, தென்னமரவடி, புல்மோட்டை உள்ளடங்கலாக அப்பிரதேசங்கள் முழுதும் பரீட்சயமாக இருந்தது. ஆரம்பத்தில் உள்ளுர் பயிற்சியுடன் வழிகாட்டியாகத் தனது பணியை செய்து கொண்டிருந்த காலத்தில் 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் லெப் காண்டிபன் உட்பட 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதில் தோள்பட்டையில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார்.

அதன் பின்னர் இந்தியா-09 பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.1990 ஆம் ஆண்டில் கொக்காவில் மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.

முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட வன்னிவிக்கிரம நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாய- கடல்வெளிச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட மின்னல் நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார். இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட யாழ்தேவி நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த சூரியக்கதிர் நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த ஜெயசிக்குறு நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட ஓயாத அலைகள்- 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.தொடர்ந்து ஓயாத அலைகள் -03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

தழிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் பல வீரத்தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். பல வியக்கத்தக்க மகத்தான போரியல் சாதனைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்தது. போர்க்குணம் மிக்க தமிழினத்தின் வெற்றிகளே இவையாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் பின்னடைவு என்பது சர்வதேச நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப உதவி, ஆயுத வெடிபொருள் உதவி, மறைமுக இராணுவ உதவி மற்றும் புலனாய்வு உதவிகளின் விளைவாகவும், பூகோள அரசியல் போட்டி காரணமாக சிங்களத்திற்கு கிடைத்த உதவிகளின் அடிப்படையிலும் ஏற்பட்ட பின்னடைவே அன்றி, சிங்களம் தனித்து நின்று விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை.

அவர்களால் அழிக்கவும் முடியாது. மேற்குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் தாண்டி இப்பின்னடைவின் அடிப்படை வெடிபொருள் விநியோகம் தடைப்பட்டமையும் மலிந்து போன துரோகத்தனங்களுமே ஒழிய வேறு ஒன்றுமல்ல.

தாயக விடுதலையையும், தமது உயிர்களை விடுதலைக்காக நம்பிக்கையுடன் அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் கனவுகளையும், மக்களின் பேரிழப்புகளையும் மனதில் நிறுத்தி நம்பிக்கையிழக்காமல், எம்மால் முடியும்! எமது அரசியல் விடுதலைக்காக இறுதிவரை உழைப்போம் என சிந்தனையில் நிறுத்துவதே இந்நாளில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கும் மற்றும் மாவீரர்களிற்கும் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களிற்கும் ஆத்மார்த்தமாக வழங்க வேண்டிய வாக்குறுதி.




























No comments