பிரச்சினைகளை உடனடியாக அகற்றி விட வேண்டும்- யாழில் கோத்தா


"உங்களது தலைவர்கள் கடந்த காலத்தை நினைவுபடுத்திச் செயற்படுகின்றனர். ஆனால் நான் உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்படுவேன்"

இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று (28) சற்றுமுன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும்,

நீங்கள் வடக்கில் காணும் அபிவிருத்திகள் மஹிந்த ராஜபக்ச காலத்தில் ஆரம்பமானது.

2009 இற்கு முன்னர் இங்கு இராணுவ முகாம்களும், இராணுவ சிப்பாய்களுமே இருந்தனர். ஆனால் 2009 இற்கு பின்னர் 90% காணிகளை நாம் விடுவித்தோம். 2015ம் ஆண்டு ஆட்சியில் இருந்து விலக்கப்பட்டதால் எஞ்சியவற்றை விடுவிக்க முடியாமல் போனது.

எனது விஞ்ஞாபனத்தில் அபிவிருத்திகளை அதிகம் உள்ளடக்கியுள்ளேன். விவசாயிகள் பற்றி அதிகம் பேசியுள்ளேன். முதல் கடமையாக நான் தரமான கல்விக்கான முதலீட்டை செய்வேன். பல்கலைக்கழகம் போக முடியாத அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் போக வசதியை ஏற்படுத்தி தருவேன்.

தொழிநுட்ப, தொழிற்பயிற்சி கல்லூரிகளை ஏற்படுத்தும் வேலைத் திட்டம் என்னிடம் உள்ளது.

உங்களுக்கு தெரியும் 13 ஆயிரம் புலிகள் சரணடைந்த போது அவர்களை சிறப்பாக சமூகமயப்படுத்தினோம். அதேபோல் 2005ம் ஆண்டுக்கு முன்னர் இருந்தே சிறைகளில் இருந்தவர்களை விடுதலை செய்ய நாம் ஆவண செய்தோம். எதிர்காலத்தில் மீதமுள்ள 274 பேரையும் விடுவிப்போம் என்று உறுதிபடக் கூறுகிறேன்.

நாம் தொடர்ந்தும் இந்தப் பிரச்சினைகளுடன் வாழ முடியாது. அவற்றை அகற்றி விட வேண்டும். செய்யக் கூடியவற்றை தான் நாம் முன் மொழிந்துள்ளோம். நான் உங்களிடம் அன்பாக கேட்பது இந்த நாடு ஸ்ரீலங்கா, இங்கு அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு - என்றார்.

No comments