கட்சியின் தலைமையை ரணில் வைத்திருக்கும் சூத்திரம் சஜித் வெற்றி பெற்றால் பிரதமர் பதவி தோல்வியுற்றால் எதிர்க்கட்சித் தலைவர் - பனங்காட்டான்

ஜனாதிபதி வேட்பாளராவதைவிட கட்சியின் தலைவர் பதவியை தம்மிடம் வைத்திருப்பதில் ரணில் ஏன் அக்கறை காட்டுகிறார்? அப்பதவி தம்மிடம் இருந்தாலே பிரதமர் அல்லது எதிர்கட்சித் தலைவராகலாம் என்பது அவருக்குத் தெரியும். சஜித் வென்றாலென்ன தோற்றாலென்ன தமக்குரிய இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் கட்சித் தலைமை தம்மிடம் இருக்க வேண்டுமென்பதை அறிந்தே ரணில் காய்களை நகர்த்துகிறார்.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலை மையப்படுத்தி சிங்கள பௌத்த இனவாத வெறியாட்டம் வேகம் கொண்டுள்ளது.

மகரகமவில் நடைபெறவேண்டிய பௌத்த பிக்குவின் இறுதிச் சடங்கை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளவுக்கு எடுத்துச் சென்று, நீதிமன்ற உத்தரவையும் மீறி அடாத்தாக தகனம் செய்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நடத்தியுள்ளனர் பௌத்த பிக்குகள்.

இந்த அடாவடித்தனத்துக்கு தலைமை தாங்கியவர் நன்கறியப்பட்டவரான ஞானசார தேரர். காவியுடை என்பது சட்டத்துக்கு அப்பாற்பட்டதென்றும், பௌத்த நாடான இலங்கையில் சட்டம் அதற்கு உட்பட்டதென்றும் சவால் விட்டு வருபவர் இவர்.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் பல வருட சிறைவாசம் பெற்று உள்ளே இருந்த ஞானசாரருக்கு மன்னிப்புக் கொடுத்து வெளியே கொண்டு வந்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஷஅகப்பை பிடிப்பவர் நம்ம ஆள்| என்ற பழமொழியை ஞாபகமூட்டும் வகையில் மைத்திரியின் தோழன்பு அவரை தாம் நினைப்பவற்றைச் செய்பவராக மாற்றியுள்ளது.

முல்லைத்தீவைச் சிங்களமயமாக்குவதற்காக அங்கு குடியேற முயற்சிக்கும் ஞானசார தேரருக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலுள்ள சிங்கள பௌத்த மதவாதிகள் குழுவொன்று தேவையான வளங்களைக் கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

போர்க்குற்றவாளிகளில் ஒருவரான சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகியிருப்பதும், இன்னொரு போரக்குற்றவாளியான கோதபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாக வரத்துடிப்பதும் ஞானசார தேரருக்கும் அவரது காவியுடைக் கூட்டாளிகளுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இலங்கையில் சிங்களவர் தமிழருக்கிடையேயானது இனப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை என்ற கட்டம் மாறி மதப்பிரச்சனையாக மாற்றப்பட்டு வரும் இவ்வேளையில் அரசாங்கம் கண்மூடிக் கொண்டு மௌன அங்கீகாரம் வழங்கி வருகிறது.

இதற்கு உறுதுணையாக கொழும்பின் சிங்கள ஆங்கில ஊடகங்கள் நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தை இருட்டடிப்புச் செய்து வருகின்றன. கொழும்பிலுள்ள ராஜதந்திர வட்டாரங்களுக்கு இது தெரிந்துவிடக்கூடாதென்பதில் இந்த ஊடகங்கள் காட்டிவரும் அக்கறைகூட ஒருவகையில் இனவாத வடிவமே.

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒன்றரை மாதங்களே இருக்கின்ற இவ்வேளையில் தமிழர் தாயகத்தில் பௌத்த ஆதிக்கம் தலைவிரித்தாட, தெற்கில் சிங்களக் கட்சிகள் தங்களின் ஜனாதிபதி வேட்பாளர்களை நிர்ணயம் செய்வதில் அக்கறை கொண்டுள்ளன.

ஆகஸ்ட் 11ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் என்ற பெயரில் ராஜபக்ச குடும்ப பிரதிநிதியாக கோதபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.

இக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச. கோதபாய வெற்றி பெறுவாரானால் மகிந்தவே அடுத்த ஆட்சியில் பிரதமர். மகன் நாமல் ராஜபக்சவுக்கும் இளைய சகோதரர் பசில் ராஜபக்சவுக்கும் அமைச்சர் பதவிகள். அங்குமிங்குமாக ஒட்டியிருக்கும் உறவினர்களுக்கும் பல பதவிகள் உண்டு.

அப்படியானால், ராஜபக்ச குடும்ப ஆட்சி மீண்டும் தலைதூக்க கோதபாயவின் வெற்றி வழிவகுக்கும்.

ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி ஜே.வி.பி.யினர் கொழும்பு காலிமுகத்திடலில் மாபெரும் பேரணியொன்றை நடத்தி அனுர குமார திசநாயக்கவை வேட்பாளராக அறிவித்தனர். 20 வருடங்களுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.வி. இறங்கியுள்ளது.

இடதுசாரிக் கட்சியினரதும், இளம் வாக்காளர்களினதும் ஆதரவு கிடைக்குமானால் சுமார் எட்டு முதல் பத்து லட்சம் வரையான வாக்குகளை ஜே.வி.பி. பெறக்கூடும். இது கோதபாயவின் வாக்கு வங்கியை குறையச் செய்யும்.

கடந்த பல மாதங்களாக இழுபறியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சியை தலைமையாகக் கொண்ட முன்னணியின் வேட்பாவளர் தெரிவு ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் நம்ப முடியாததாக சஜித் பிரேமதாசவை வேட்பாளராக கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே முன்மொழிந்து பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க குத்துக்கரணம் அடித்தாரா அல்லது ஷயு ரேண்| போட்டாரா என்பது எவருக்குமே சரியாகப் புலப்படவில்லை.

இலங்கை அரசியலில் கிழட்டு நரி என்ற பட்டத்தில் பிரபல்யமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பெறாமகனான ரணில் விக்கிரமசிங்கவை குள்ளநரி என்றே பலரும் குறிப்பிடுவர். அப்பெயருக்கேற்ப மற்றவர்களுக்குப் புலப்படாத திட்டமொன்றின் பின்னணியில் சஜித்  வேட்பாளராக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நம்பமுடியாத ஆனால் நம்பியே ஆகவேண்டிய ஒரு விடயம் இதுவாகும். அதனை சுருக்கமாக தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.

அரசியலில் எதிரும் புதிருமாகக் காட்சி தரும் ரணிலும் மகிந்தவும் உள்ளார்ந்த நட்புக் கொண்ட அரசியல்வாதிகள். இருவேறு கட்சிகளின் தலைவர்களான போதிலும் இருவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்வது இவர்களிடையே எழுதாத ஒப்பந்தம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த தோல்வியடைந்த அன்றிரவு அரசுக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகளை வழங்கி மிகவும் பௌத்திரமாக மகிந்தவையும் அவரின் குடும்பத்தினரையும் அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைத்தவர் ரணில்.

நல்லாட்சிக் காலத்தில் பல வழக்குகளில் மகிந்த - அவரது மனைவி - அவரது மகன்மார் - மற்றும் கோதபாய ஆகியோர் மீது எந்த வழக்குகளும் பாயாது சகல பாதுகாப்புகளையும் அளித்தவரும் ரணில்தான்.

இந்தப் பின்னணியில், மகிந்த குடும்பம் ஆட்சிக்கு வருவதையோ, கோதபாய ஜனாதிபதியாக வருவதையோ ரணில் தமக்கு ஆபத்தானதாகப் பார்க்கவில்லை. ஒருவகையில் தமக்குப் பாதுகாப்பானதாகவே இதனை அவர் கருதுகிறார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆரம்பக் கருத்துக் கணிப்பீடுகள் கோதபாயவுக்கே சாதகமாகவுள்ளன. ஊடகங்களும் சாத்திரங்களும் தினசரி இதனையே தெரிவித்து வருகின்றன.

இப்படியான சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தோற்றவர் என்ற களங்கத்தை தமக்கு ஏற்படுத்திக் கொள்ள ரணில் இப்போது விரும்பவில்லை.

எனவே, சஜித் போட்டியிடுவதாக அறிவித்து, கோதபாயவிடம் அவர் தோல்வியடைந்தால் அத்துடன் அவரது அரசியல் வாழ்க்கை அஞ்ஞானவாசம் அடைந்துவிடுமென்பது ரணில் போட்டிருக்கும் கணக்கு.

சஜித் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடுவது எந்தவகையிலும் தாம் தொடர்ந்து வகித்துவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை முற்கூட்டியே அவர் நிச்சயப்படுத்திவிட்டார்.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எவரும் ஏதாவதொரு கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தால் மாத்திரமே பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியும். இதனை நன்குணர்ந்ததாலேயே மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை உருவாக்கி, அதன் தலைவராகி, அதன் வேட்பாளராக கோதபாயவை நிறுத்தியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கோதபாய ஜனாதிபதியாகத் தெரிவானால், அக்கட்சியின் தலைவர் என்ற பதவி வழியாக பிரதமர் பதவி மைத்திரிக்குச் சென்றுவிடும்.

இதன் காரணமாகவே பொதுச்சின்னத்தில் கோதபாயவை போட்டியிட இணங்காது, பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் அவர் போட்டியிடுவார் என்ற நிலைப்பாட்டில் மகிந்தவும் அவரது குழுவினரும் உள்ளனர்.

மகிந்தவின் திட்டத்துக்கு நிகரான திட்டத்தையே ரணிலும் வகுத்துள்ளார். இதனை பின்வருமாறு பார்க்கலாம்.

- 42 வருட அரசியலில் நான்கு தடவை பிரதமராக இருந்தவர். பல தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். பல அமைச்சர் பதவிகளை வகித்தவர். முதலாவது ஜனாதிபதி ஜே.ஆரின் குடும்ப வாரிசு. எனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தாமே தொடர வேண்டுமென்பது அவரது இலக்கு.

- கட்சியின் தலைவராக இருந்தால் மட்டுமே வெற்றி பெற்றாலென்ன தோல்வியடைந்தாலென்ன அரசியல் உயர்பீடக் கதிரையில் அமரும் வாய்ப்பு எப்போதும் இருக்கும்.

- சஜித் வெற்றி பெற்று ஜனாதிபதியானால், கட்சியின் தலைவர் என்ற பதவி வழியாக ரணில் பிரதமராவார். இதனை எவராலும் தடுக்க முடியாது. 19வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதியைவிட பிரதமருக்கே கூடிய அதிகாரங்கள்.

- சஜித் தேர்தலில் தோல்வியடைவாரானால் கட்சித் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ரணிலுக்கே செல்லும். சஜித்துக்கு எந்தப் பதவியும் கிடையாது. அவரின் எதிர்காலம் பூச்சியமாகும்.

முடிவில், கோதபாய வென்றால் மகிந்த பிரதமர். ரணில் எதிர்க்கட்சித் தலைவர். சஜித் வெற்றி பெற்றால் ரணில் பிரதமர், மகிந்த எதிர்க்கட்சித் தலைவர்.

இருவரில் யார் வென்றாலென்ன தோற்றாலென்ன, ரணிலுக்கும் மகிந்தவுக்கும் உயர் பதவிகளுக்கு உத்தரவாதம். இந்தச் சூத்திரம் தேர்தல் முடிவுகளின் பின்னரே பலருக்கும் தெரிய வரலாம்.

இவ்வகையான திட்டங்களை நெறிப்படுத்துவதில் ரணிலும் மகிந்தவும் கூடப்பிறவாத இரட்டையர்கள்.

இத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

No comments